அக்கரபத்தனை நகரில் ஒருவகையான பதற்றம் நிலவுவதாகவும் அங்கிருக்கும் கடைகளில் சில கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அகரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் திருவுருவச் சிலைகளும் பொம்மைகளும் இனந்தெரியாதோரால் நேற்றிரவு அல்லது இன்று விடியற்காலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலய நிர்வாக சபையினர் அக்கறபத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள பிரதான ஆலயமான சித்தி விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இன்றைய இலங்கைச் செய்திகள்
புனர்நிர்மாண பணிகள் நிறைவடைந்து தற்பொழுது பொம்மைகளுக்கு வெளிப்புற பூச்சு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்து நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஆலயத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.
இது இனந்தெரியாத குழு ஒன்றின் செயற்பாடு எனவும் ஆலயத்தில் நடைபெற இருந்த கும்பாபிஷேக நிகழ்வை குழப்புவதற்கான செயற்பாடு எனவும் மேலும் மத ரீதியிலான முரண்பாடுகளை உருவாக்க திட்டமிடப்பட்ட செயற்பாடாகவும் இதனை கருதுவதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அகரபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லிந்துலை பகுதியில் அமைந்துள்ள மாதா சிலை ஒன்றும் அண்மையில் உடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.