அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! சுப நேரங்கள் உள்ளே

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! சுப நேரங்கள் உள்ளே

தொன்மைவாய்ந்த வரலாறு மற்றும் பண்பாட்டின் உன்னதங்களை நினைவுகூர்ந்து புதிய தலைமுறையினரை சமூகமயப்படுத்தும் வாழ்வியலின் முக்கிய அங்கமாகக் கொண்டாட்டங்கள் மிளிர்கின்றன.

இந்துப் பண்பாட்டின் முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்றாக விளங்கும் சித்திரைப் புத்தாண்டு இலங்கையில் மாத்திரமின்றி இந்துக்கள் செறிந்து வாழும் உலக நாடுகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

துர்முகி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று மாலை 6.36 அளவில் மலர்ந்தது. திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கு அமைய இரவு 7.48 அளவில் பிறக்க உள்ளது.

பரித்தேரில் பவனிவரும் சூரியபகவான் ராசி மண்டலத்தின் மேச ராசியில் பிரவேசிக்கும் தருணத்தை இந்துக்கள் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

புத்தாண்டு மலர்ந்ததன் பின்னர் விஷூ புண்ணியகாலத்தில் மருத்து நீரை சிரசில் வைத்து நீராடுதல் பீடைகளை அகற்றி செளபாக்கியங்களை நல்கும் எனும் நம்பிக்கை இந்துக்களிடையே தொன்றுதொட்டு நிலவுகின்றது.

வருடப்பிறப்பின்போது தோஷ நட்சத்திரங்களாக கணிக்கப்பட்டுள்ள மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை மற்றும் சதயம் ஆகிய நட்சத்திரங்களில் ஜனனித்தவர்கள் மருத்து நீர் வைத்து தோய்வது சிறந்ததாகும்.

துர்முகி வருடப்பிறப்பன்று வெள்ளை அல்லது பச்சை நிற ஆடைகளை அணிந்து ஆலய தரிசனம் செய்வது சிறப்பைத் தரும் என சிவாச்சாரியார்கள் தெரிவிக்கின்றனர்.

வருடம் முழுவதும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் சகல சௌபாக்கியங்களும் நிறைய வேண்டும் எனும் நோக்கில் பின்பற்றப்படுகின்ற கைவிசேடம் வழங்கும் சம்பிரதாயத்திற்கான சுபநேரங்களாக 16.04.2016 சனிக்கிழமை இரவு 10.30 இல் இருந்து நள்ளிரவு 12 மணி வரையும் அதேபோன்று, 18.04.2016 திங்கட்கிழமை காலை 09.07 இலிருந்து 09.35 வரையிலும், காலை 09.47 இல் இருந்து முற்பகல் 11.46 வரையும், மாலை 06.05 இல் இருந்து இரவு 07.25 வரையும், மற்றும் இரவு 10.19 இல் இருந்து நள்ளிரவு 12.15 வரையிலும் சுபநேரங்கள் காணப்படுகின்றன.