அப்ரிடி ஓய்வு?

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அப்ரிடி ஓய்வு?

பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரிடி. 36 வயதாகும் அப்ரிடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். டி20 போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவராக அப்ரிடி செயல்பட்டார். இந்த தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியதால் தலைவர் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கப்பட்டார். அத்துடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்ரிடி தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் விளையாட விரும்பினார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒரேயொரு டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியில் அப்ரிடிக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

விரைவில் பாகிஸ்தான் அணி மேற்கிந்திய அணிக்கெதிராக டி20 போட்டியில் விளையாட இருக்கிறது. அதன்பின் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம்தான் டி20 போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் அப்ரிடி அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

இதற்காகத்தான் மேற்கிந்திய அணிக்கெதிரான தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் அப்ரிடி இடம்பெறாத நிலையில் 16-வது வீரராக அப்ரிடியை அணியில் சேர்த்துள்ளது.

ஆனால், அப்ரிடி பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும், தேசிய அணியில் இடம்பிடிக்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக் குழு அப்ரிடியின் கருத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. மேலும், அப்ரிடி நல்ல மரியாதையுடன் ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறது. அதே வேளையில் வெளிநாட்டு லீக் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதி அளிக்க இருக்கிறது.