அமெரிக்கவால் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம விமானம் யாருடையது?


அமெரிக்கவால் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம விமானம் யாருடையது?

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு மேலாக

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு மேலாக பறந்த யாருடையது என்று அடையாளம் காணப்படாத மர்ம விமானம் ஒன்றை F-22 போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் தெரிவித்துள்ளது

சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சி பலூன் ஒன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய ஒரு வாரத்திற்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பென்டகன் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் இதுபற்றி கூறுகையில், வானில் காற்றில் பறந்த அடையாளம் தெரியாத விமானம் பிக்கப் டிரக் வாகனத்தின் அளவு இருந்தது.

குறித்த விமானத்தை சுட்டு வீழ்த்த அமெரிக்க பாதுகாப்புப் படைகள் சைட்விண்டர் ஏவுகணைத் தாக்குதல் வல்லமை கொண்ட F-22 போர் விமானத்தைப் பயன்படுத்தியது.

இதற்கிடையில், அடையாளம் காணப்படாத விமானம் யாருடையது என்பது இன்னும் தெரியவில்லை என்றும், ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி, அமெரிக்கா மற்றும் கனேடிய வான் பரப்பில் ஒரு வார காலப் பயணத்திற்குப் பின்னர் சீனா உளவு பார்க்க அனுப்பியதாக அமெரிக்கா குற்றம் சாட்டிய சீன கண்காணிப்பு பலூனை தென் கரோலினா கடற்கரையில் F-22 போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.

இதற்கு பதிலடியாக சீன அரசாங்கம் இது ஒரு சிவிலியன் ஆராய்ச்சி பலூன் என்றும், உளவு விமானம் அல்ல என்றும் கூறியுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் தெரியாத விமானம் தொடர்பான விரிவான அறிக்கையை பென்டகன் இதுவரை சமர்ப்பிக்கவில்லை எனவும், கடந்த வியாழன் முதல் தரை ராடார் விமானத்தை கண்காணித்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.