அல்ஜசீராவின் ஊழியர்கள் 500 பேர் பணி இழக்கும் நிலை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அல்ஜசீராவின் ஊழியர்கள் 500 பேர் பணி இழக்கும் நிலை

சர்வதேச ஊடக நிறுவனமான அல்-ஜசீரா கிட்டத்தட்ட 500 பணியிடங்களை நீக்கவுள்ளது.

அல் ஜசீராவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கத்தாரிலேயே அனேகமான பணியிழப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. உலகின் மற்ற இடங்களிலும் பல பணியிழப்புகள் ஏற்படவுள்ளன.

‘ஊழியர்களின் வினைத் திறனை மேலும் அதிகரிப்பதை நோக்காகக் கொண்டே’ இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அல் ஜசீரா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சர்வதேச ரீதியாக எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, கத்தார் அரசாங்கம் அல்-ஜசீராவிற்கு வழங்கும் நிதி குறைந்துள்ளதாக ஊடகங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் உள்ள தமது கிளையை மூட உள்ளதாக அல்-ஜசீரா அறிவித்து இரண்டு மாதங்களில் ஞாயிற்றுக் கிழமை இந்த அறிவிப்பும் வந்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல ஊடகவியலாளர்கள் பலரை சேர்ப்பதற்காக பல மில்லியன் டாலர் பணத்தை அல் ஜசீரா செலவிட்டிருந்தது.

ஆனால், அதன் செய்தி நிகழ்ச்சிகளுக்கு போதியளவு நேயர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

1996-ம் ஆண்டில், கத்தார் அரசாங்கத்தின் நிதியுதவில் நிறுவப்பட்ட அல்-ஜசீரா செய்தி ஊடகத்துக்கு உலகெங்கிலும் 70க்கும் அதிகமான அலுவலகங்கள் உள்ளன.