இந்திய மக்களைக் காட்டிலும், நண்பர் கௌதம் அதானிக்கு பணியாற்றுவதே மோடியின் முக்கிய பணி!
அதானி குழுமத்திற்கு ஆதரவாக செயற்படும் இந்திய அரசாங்கம், முக்கியமான அண்டை நாடான இலங்கைக்கு அந்த வணிகக் கூட்டமைப்பை தள்ளுவதாக இந்திய காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
முன்னதாக, அதானி குழுமம் மீது மோசடியான பரிவர்த்தனைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசேர்ச் நிறுவனம் சுமத்தியிருந்தது.
இதனையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிவைக் கண்டன.
இந்தநிலையில், இந்திய எதிர்க்கட்சிகள், மத்திய அரசாங்கத்தின் மீது, தமது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
எனினும், அனைத்து சட்டங்கள் மற்றும் வெளிப்படுத்தல்கள், தேவைகளுக்கு இணங்குவதாக கூறியுள்ள அதானி குழுமம், தம்மீதான குற்றச்சாட்டுக்களை பொய் என்று கூறி அவற்றை நிராகரித்துள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடியிடம் மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அதானி குழுமத்தை வளப்படுத்த வேண்டும் என்ற மோடியின் வெளிப்படையான அவசரம், பங்களாதேஷில் ஏற்கனவே அதானியுடன் தொடர்புடைய செலவுகள் மற்றும் தற்போது, அண்டை நாடான இலங்கையில் அதானி குழுவை ஈடுபடுத்தியது தொடர்பில் இந்த கேள்விகள் அமைந்துள்ளன.
இதேவேளை, இந்திய மக்களுக்காக பணியாற்றுவதைக் காட்டிலும், நண்பரான கௌதம் அதானிக்கு இந்தியாவிலும் வெளியிலும் ஒப்பந்தங்களைப் பெறுவதே பிரதமர் மோடியின் முக்கிய பணியாக இருக்கிறது என்று காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.