இந்த வயசுல நான் இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை – ரங்கன ஹேராத்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இந்த வயசுல நான் இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை – ரங்கன ஹேராத்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதற்கு ரங்கன ஹேராத் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதற்கான இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மேத்யூஸ் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் நடந்த டெஸ்ட் தொடர் போட்டியில் இவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் ஜிம்பாப்வே தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

இதனையடுத்து துணைத்தலைவரான சந்திமால் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஹேராத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஹேராத்துக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், 38 வயதில் நான் தலைவர் பதவியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் தலைவராக அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இதை நான் எனது நாட்டிற்காக செய்யவிருக்கிறேன். எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

எங்களிடம் சற்று அனுபவம் குறைவாக இருந்தாலும், உள்ளூர் போட்டிகளில் கிடைத்த அனுபவத்தால் சவாலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

அவுஸ்திரேலிய தொடரின் போதே இதன் வெளிப்பாடு இருந்தது. இந்த நம்பிக்கை முக்கியமானதாக இருக்கும்.

நான் ஜிம்பாப்வே அணியுடன் ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடியுள்ளேன். ஜிம்பாப்வேயில் விக்கெட் வீழ்த்துவது சற்று வித்தியாசமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.