இரண்டு பிள்ளைகளின் தாயை துஷ்பிரயோகம் செய்த புலனாய்வு அதிகாரிகள்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இரண்டு பிள்ளைகளின் தாயை துஷ்பிரயோகம் செய்த புலனாய்வு அதிகாரிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் சுமார் 38 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரையம்பதி – கர்பலா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்தேக நபர்கள், சுமார் 38 வயதுடைய குறித்த பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி கர்பலா பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிய வருகின்றது.

அத்தோடு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் குறித்த பெண் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும், துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவரையும் இன்று (26) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இப் பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

நிரூபர்-