இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான கடலில் வீசப்பட்ட மர்ம பொதி!


இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான கடலில் வீசப்பட்ட மர்ம பொதி!

இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான கடலில் மர்மப் பொதி ஒன்று வீசப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து இன்று(08) தமிழக கடலோர எல்லை மற்றும் சர்வதேச கடல் எல்லையில் இருந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதன்போது இலங்கையில் இருந்து தமிழ்நாடு நோக்கி நாட்டுப் படகு ஒன்று பயணித்துள்ளது.

அதிகாரிகள் அதனை நிறுத்த முயன்ற போது, அந்த படகு நிற்காமல் சென்றுள்ளது.

இதனால் அந்த படகை இந்திய கடற்படை அதிகாரிகள் துரத்திச் சென்று பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த நாட்டுப் படகில் இருந்தவர்கள், ஒரு மர்மப் பொதியை கடலில் வீசிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அந்த படகை துரத்திப் பிடித்த அதிகாரிகள், அதில் இருந்தவர்களை கரைக்கு கொண்டு விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள், கடலில் வீசியது தங்கமா? அல்லது போதைப்பொருளா? என்பதைக் கண்டறிய கடற்படை அதிகாரிகள் கடலில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.