இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதில் கடும் கொள்கைகள் அமுல்! சுவிஸ் அறிவிப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதில் கடும் கொள்கைகள் அமுல்! சுவிஸ் அறிவிப்பு

இலங்கை பிரஜைகளுக்கு அகதி அந்தஸ்தை வழங்கும் நடவடிக்கையில் மேலும் பல கடுமையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தற்போது இலங்கையின் களநிலவரத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சுவிஸ் இன்போ.சிஎச் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சுவிஸின் குடிவரவு செயலகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையின் மனித உரிமை நிலவரங்களில் பாரிய குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன

சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்தல் என்பது இதற்கு ஒரு உதாரணமாகும்.

எனவே ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் என்போர், அரசியல் அகதிகள் என்ற நிலைக்கு விண்ணப்பிப்பதில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவுள்ளதாக சுவிஸ் குடிவரவு செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்களுக்கு சுவிஸில் பாதுகாப்பு அவசியம் இல்லை.

எனினும் அகதி அந்தஸ்து வழங்குவதில், மனித உரிமை விடயங்களின் தனிப்பட்ட தவிர்க்க முடியாத காரணங்கள் கருத்திற்கொள்ளப்படும் என்றும் அந்த செயலகம் குறிப்பிட்டுள்ளது.

2016ம் ஆண்டு மே மாதம் இறுதிவரை 1316 இலங்கையர்கள் அகதி அந்தஸ்துக்கு கோரியுள்ள நிலையில் தேங்கியுள்ளன.

5000 பேர் சுவிட்ஸர்லாந்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதில், 3674 பேர் அகதி அந்தஸ்தை பெற்றவர்களாவர்.

1613 பேர் நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளனர். எனினும் சுவிஸ் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை தமிழர் தரப்புக்கள் ஏற்க மறுத்துள்ளன.

ஈழத் தமிழர்களுக்கான சுவிஸ் பேரவையின் உதவி தலைவர் அன்னா அன்னூர், விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக இருந்தவர்கள் நாடு கடத்தப்பட்டு விமான நிலையத்துக்கு சென்றிறங்கும்போது சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2009ம் ஆண்டில் போர் முடிந்த போதும் இன்று வரை அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.