இலங்கை GSP பிளஸ்ஸை மீண்டும் பெற்றுக்கொள்ள பெல்ஜியம் உதவும்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இலங்கை GSP பிளஸ்ஸை மீண்டும் பெற்றுக்கொள்ள பெல்ஜியம் உதவும்

மிகவும் பலவீனமடைந்திருந்த பெல்ஜியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இணைந்து செயற்படுவதாக பெல்ஜியம் பிரதமர் சால்ஸ் மிஷேல் கூறியுள்ளார்.

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினருடன் பிரஸ்ஸல்ஸ் நகரில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக மற்றும் நல்லாட்சியை மதிப்பதாக பெல்ஜியம் பிரதமர் சால்ஸ் மிஷேல் கூறியதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இலங்கை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு பெல்ஜியம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன் இருதரப்பு உறவை பலப்படுத்தும் நோக்கில் அடுத்த வாரம் பெல்ஜியம் நாட்டு பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து பெல்ஜியம் பிரதமருக்கு ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் எடுத்துக் கூறியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தரமல்லாத உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக பெல்ஜியமிற்கு இலங்கை உதவி வழங்க வேண்டும் என்று பெல்ஜியம் பிரதமர் கேட்டுக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது