உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய போராட்டம்!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய போராட்டம்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாடு தழுவிய அடிப்படையில் கூட்டு எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடாத்த உள்ளனர்.

உள்ளுராட்சி மன்றங்களை கலைத்து உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாமையை கண்டித்து நாட்டின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் எதிரிலும் நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு சமாந்திரமாக பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

பொரளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

மார்ச் மாதம் 31ம் திகதி நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த நாளாகும். அரசாங்கம் உரிய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமையினால் இவ்வாறு கூறுகின்றோம்.

சர்ஜன வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்றின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு மட்டுமே தற்போதைய அரசாங்கத்தின் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் நடாத்தாது காலம் தாழ்த்தும் நடவடிக்கை இரண்டாவதாகின்றது.

எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகவில்லை என்றால் ஏன் அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களை கலைக்க வேண்டும்?

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதனை நிச்சயமாக எவரினாலும் கூற முடியாது.

மார்ச் மாதம் 31ஆம் திகதி நாடு முழுவதிலும் காணப்படும் உள்ளுராட்சி மன்றங்களின் எதிரில் போராட்டம் நடத்தி, பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டி மகஜர் தயாரித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சரிற்கு மகஜரின் பிரதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.