தேர்தலை சாட்டாக வைத்து வெளிநாடுகளில் நிதிசேகரிப்பவர்கள் மீது சி.வி.விக்னேஸ்வரன் கண்டனம்


தேர்தலை சாட்டாக வைத்து வெளிநாடுகளில் நிதிசேகரிப்பவர்கள் மீது சி.வி.விக்னேஸ்வரன் கண்டனம்

தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில் தனது சம்மதத்தையும் பெறாது, உள்ளூராட்சி தேர்தலைச் சாட்டாக வைத்து வெளிநாடுகளில் நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “எனது தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில் அதன் செயலாளர் நாயகம் ஆகிய எனக்கு தெரிவிக்காது எனது சம்மதத்தையும் பெறாது வெளிநாடுகளில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலைச் சாட்டாக வைத்து நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

நானோ எனது கட்சியோ, எமது கட்சி உறுப்பினர்களோ இது பற்றி எந்த வித நிதி சேகரிப்பிலும் இறங்கும் படி எவரையும் கோரவில்லை.

எனது கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அனுதாபிகளுக்கும் இத்தால் இதனைத் தெரியப்படுத்தி இவ்வாறாகப் பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் எவரும் பங்களிப்பு எதையும் வழங்க வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இந் நிதி சேகரிப்பானது இலங்கையிலிருக்கும் சிலரின் ஆதரவுடன் தமது சொந்த நலன்களுக்காகக் கூட இடம்பெறக்கூடும். அப்படி யாராவது எமது கட்சியின் சார்பில் ஆதரவு மேலீட்டால் செயற்பட்டுவரின் அவர்களையும் அவ்வாறு செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அரசியல் கட்சிகளின் நிதி அறிக்கைகள் வருடா வருடம் தேர்தல் ஆணையாளருக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் தவறாது அனுப்பப்பட வேண்டும்.

சென்ற ஆண்டுக்கான அறிக்கையை அனுப்புமாறு ஆணைக்குழு இப்பொழுது கோரியிருக்கின்றது. அவ் அறிக்கைளை இப்பொழுது நாம் தயாரித்துக் கொண்டு இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.