ஐ.தே.கட்சியின் அரசாங்கத்தை காக்கவே மைத்திரி சுதந்திரக் கட்சிக்கு தலைவரானார்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஐ.தே.கட்சியின் அரசாங்கத்தை காக்கவே மைத்திரி சுதந்திரக் கட்சிக்கு தலைவரானார்

மைத்திரிபால சிறிசேன அப்பம் சாப்பிட்டு விட்டு வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டதாகவும் ஜனாதிபதியாக பதவியேற்று 48 மணிநேரத்திற்குள் தனியான மத்திய செயற்குழுவை நியமித்து பலவந்தமாக சுதந்திரக் கட்சியை கைப்பற்றிக்கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா உடுகம்பள பிரதேசத்தில் உள்ள பிரசன்ன ரணதுங்கவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுத் தேர்தல் நடந்த போது மகிந்தவுக்கு பிரதமர் பதவியை தரப்போவதில்லை என பகிரங்கமாக கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறும் என்ற அச்சத்தில் சுசில் மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் கட்சியின் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆளுகையின் கீழ் இருந்த உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை நீடிக்கவில்லை. ஊவா மாகாண சபையை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கொடுத்தார்.

மக்கள் ஆதரவுள்ள அமைப்பாளர்களை நீக்கி விட்டு, ஆதரவாளர்களுக்கு அந்த பதவிகளை கொடுத்தார்.

எங்களை தலைவருடன் இருக்குமாறு கூறுகிறார். ஆனால் தலைவர் ரணிலுடன் இருக்கின்றார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், கட்சியை நேசிப்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை பெறவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை பாதுகாக்கவே அவர் கட்சியின் தலைவர் பதவியை கைப்பற்றினார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ரணிலை பிரதமராக நியமித்து அவர் தலைமையிலான அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல மைத்திரிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேவைப்பட்டது.

இதனால், பல்வேறு அழுத்தங்களை கொடுத்து கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தேசிய அரசாங்கத்தில் இணைத்தார் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.