ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கடும் தண்டனை: வடகொரிய ஜனாதிபதி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கடும் தண்டனை: வடகொரிய ஜனாதிபதி

வட கொரியாவில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ரியோ ஒலிம்பிக் போட்டி முடிவு பெற்ற நிலையில் வடகொரியா 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்றுள்ளது. ஆனால் இந்த நாட்டின் பரம எதிரியாக விளங்கும் தென் கோரிய நாடு 9 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம் மற்றும் 9 வெண்கலங்கள் என மொத்தம் 21 பதக்கங்கள் பெற்றுள்ளது.

இந்நிலையில், வடகொரிய நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் அன் ஒலிம்பிக் போட்டி குழுவினருக்கு குறைந்தது 17 பதக்கங்களையாவது வென்று வர வேண்டும் என கண்டிப்பாக கூறி அனுப்பிய நிலையில், வெறும் 7 பதக்கங்களை மட்டும் வென்றுள்ளது கிம் ஜாங் அன்னுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கிம் ஜாங் அன் பதக்கம் வெல்லாத வீரர்களை தண்டிக்கும் வகையில் வீரர்களை நிலக்கரி சுரங்கத்தில் கூலித் தொழிலாளியாக வேலைக்கு அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து, வடகொரிய வல்லுனர் டோஷிமிட்சு ஷிகேமுரா கூறியதாவது, ‘ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வீடு, கார் மற்றும் பல பரிசுகள் வழங்கப்பட்டு வரும் அதே நேரத்தில் பதக்கம் வெல்லாத வீரர்கள் மீது உள்ள கோபத்தினால் அவர்களை வசதிகள் குறைவான வீடுகளுக்கு இட மாற்றம் செய்வதுடன், அவர்களுக்கு வழங்கப்படுகிற சலுகைகளை குறைத்துக்கொள்ளவும் கிம் ஜாங் அன் முடிவு செய்துள்ளார்’ என தெரிவித்துள்ளார்.