கடந்த ஆட்சியின் போதே அதிகமாக ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டனர்: ஜோசப் ஸ்டாலின்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கடந்த ஆட்சியின் போதே அதிகமாக ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டனர்: ஜோசப் ஸ்டாலின்

கடந்த அரசாங்கத்தின் போதே அதிக ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் சிவராம் பற்றி இதுவரை எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பெங்கமுவ நாலக்க தேரர், கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தினரை விடுவிக்குமாறு நேற்று கோரிக்கை விடுத்துள்ளதோடு, இந்த அரசில் தான் அதிகமாக இராணுவத்தினர் மற்றும் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தவறுகள் யார் செய்தாலும் அவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவது அனைவரினதும் கடமை இதுவே பெங்கமுவ நாலக்க தேரரின் குற்றச்சாட்டிற்கு தன்னுடைய பதில் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தையும் இதன்போது ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தமைக்கான காரணம் நாட்டில் உள்ள ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆனால் இதுவரை அவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த அரசானது போலியான போராட்டங்களை கண்டு பயம் கொள்ளாது, ஆட்சிக்கு வரும் போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.