கதாநாயகிகள் வாங்கும் சம்பள விபரம் இதோ!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கதாநாயகிகள் வாங்கும் சம்பள விபரம் இதோ!

சினிமாவை கடந்த காலங்களில் கதாநாயகர்கள்தான் ஆக்கிரமித்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே கதைகள் வந்தன. சம்பளமும் அவர்களுக்கு அதிகம் தரப்பட்டது.

இப்போது சினிமாவில் ஆணாதிக்கம் தளர்ந்து கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் கொடி கட்டிப்பறக்கிறார்கள். அவர்களை முன்னிலைப்படுத்தும் கதையம்சத்துடன் நிறைய படங்கள் வருகின்றன.

அந்த படங்களும் முன்னணி கதாநாயகர்கள் படங்களை வசூலில் வீழ்த்தி சக்கைப்போடு போடுகின்றன. இதனால் கதாநாயகிகள் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் ரூ.1 கோடி என்பது கதாநாயகிகளின் அதிகபட்ச சம்பளமாக இருந்தது. ஆனால் தற்போது அது பல மடங்காக உயர்ந்து இருக்கிறது.

அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் பட்டியலில் நயன்தாரா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். தமிழ், தெலுங்கு இரண்டிலுமே இவரது படங்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஒரு மொழியில் எடுத்த படத்தை இன்னொரு மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கிறார்கள். இதனால் நயன்தாரா தனது சம்பளத்தை குறைந்தபட்சம் ரூ.3 கோடியாக நிர்ணயித்து இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இவரை அணுகியபோது ரூ.4 கோடி கேட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அவ்வளவு தொகையை கொடுக்க தயாரிப்பாளர்கள் சம்மதிக்காததால் தற்போதைய நிலவரப்படி அவரது சம்பளம் ரூ.3 கோடியாக இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் அனுஷ்கா இருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.1.50 கோடியில் இருந்து 2 கோடி வரை வாங்குகிறார்.

அருந்ததி படத்தில் இருந்து தற்போதைய பாகுபலி வரை அனுஷ்காவின் மார்க்கெட் ஏறுமுகமாகவே இருக்கிறது. சமந்தா ரூ.1.45 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

காஜல் அகர்வால் ரூ.1 கோடியில் இருந்து 1.50 கோடி வரை வாங்குகிறார். காஜல் சினிமாவில் அறிமுகமானபோது லட்சுமி கல்யாணம், சந்த மாமா போன்ற தெலுங்கு படங்களுக்கு ரூ.20 லட்சம்தான் வாங்கினார். மகதீரா வெற்றிக்கு பிறகு அவருடைய சம்பளம் மளமள என உயர்ந்தது.

திரிஷாவும் ரூ.1 கோடி முதல் ரூ.1.50 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது.

தமன்னா சினிமாவுக்கு வருவதற்கு முன் தனது முதல் விளம்பர படத்தில் நடித்து வாங்கிய சம்பளம் வெறும் ரூ.2 ஆயிரம்தான். இப்போது ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறார். கூடுதல் நாட்கள் கால்ஷீட் கேட்டால் அதற்கு தனியாக ரூ.20 லட்சம் கேட்கிறார். ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஆடுவதற்கு ரூ.40 லட்சம் வாங்குகிறார்.

சுருதிஹாசனுக்கு தமிழ், தெலுங்கு பட உலகம் இரண்டிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவர் ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

இவைகள் தவிர கதாநாயகிகள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கவும் கேரவன்களில் ஓய்வெடுக்கவும் தயாரிப்பாளர்கள் தனியாக செலவு செய்கிறார்கள். கேரவனுக்கு மட்டும் ஒரு நடிகைக்கு மாத வாடகை ரூ. 3 லட்சம் வருகிறதாம்.