கற்றுக்கொண்ட பாடங்கள் மூலம் தூய்மையான வரலாற்று படைக்க தமிழர்கள் முன்வர வேண்டும்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கற்றுக்கொண்ட பாடங்கள் மூலம் தூய்மையான வரலாற்று படைக்க தமிழர்கள் முன்வர வேண்டும்

எழுகதமிழ் பேரணியின் பின்னர் தனது உயிருக்கு உலைவைக்க அரசியலுள் எத்தணிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு நிகழ்வு இன்று யாழ். நூச்சிமார் கோவில் பகுதியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் தனது உரையினை மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

அதன்படி அந்த உரையினை பேராசிரியர் சிற்றம்பலம், மண்டபத்தில் வாசித்தார். அந்த உரையில் இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

இன்றைய இளம் சந்ததியினரில் பெரும்பாலானோர் இலங்கை அரசியல், உலக அரசியல் போன்ற அரசியல் விவகாரங்களில் சிரத்தை காட்டாது ஒதுங்கியிருக்கின்ற அல்லது வேறு துறைகளில் கூடிய நாட்டங்களை கொண்டிருக்கின்ற தன்மைகளை பல சந்தர்ப்பங்களில் நான் அவதானித்திருக்கின்றேன்.

அந்த வகையில் கடந்த சுமார் 85 ம் ஆண்டு காலப்பகுதியின் போது இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல் தலைவர்களின் பேரினவாதப்போக்கு, தமிழர்கள் மீதான அடக்குமுறை போன்ற பல விடயங்களை உள்ளடக்கி அரசியல் தத்துவங்களை அனைவரும் இலகுவில் அறிந்து, உணர்ந்து அதன்பால் நாட்டம் கொள்ளத்தக்க வகையில் இந்த நூல் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த நூறு ஆண்டு காலங்களாக தமிழ் மக்கள் தமது அரசியல் முன்னெடுப்புக்களில் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதும், அதன் விளைவாகத் தோல்விகளைத்தழுவிக் கொள்கின்ற செயற்பாடுகளும் நடைபெற்றுவருவது நாம் அனைவரும் அறிந்துள்ள விடயம்.

இந்நூலில் குறிப்பிட்டவாறு தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு வெற்றிக்கான வழிவகைகளைத் தேடுவதற்கு நாம் தயார் இல்லை எனின் தொடர்ந்தும் நாம் தோல்விகளைச் சந்திப்பதற்கு தயாராகின்றோம் என்பதே யதார்த்தம் ஆகின்றது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது அணுகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி பேரழிவுற்ற ஜப்பான் அக்கணமே தன்னைச் சுதாகரித்து தனக்கு ஏற்பட்ட சவாலை எதிர் கொண்டு சுமார் கால் நூற்றாண்டு காலப்பகுதியில் தன்னை இரண்டாவது உலகப் பொருளாதார வல்லரசாக ஆக்கிக் கொண்டது.

ஐரோப்பியர்களின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகி பாரிய இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட யூத மக்கள் தமக்கு ஏற்பட்ட பாரிய இனக்கொலைகளின் சவால்களை எதிர் கொண்டு, ஐக்கியப்பட்டு, அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி புதிய அரசை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர்.

இலங்கையில் வாழும் தமிழர்களும் ஓரணியின் கீழ் ஐக்கியப்பட்டு தமது உரிமைக்காக வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு என்ற பேதங்கள் இன்றி மொழியால் ஒன்றுபட்டு உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய காலம் கனிந்து வந்துள்ளது.

சில வேளைகளில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும் அவர்களின் சுய நிர்ணய உரிமை பற்றியும் சில சிங்கள தலைவர்களும் இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட தலைவர்களும் அவ்வப்போது சார்பான கருத்துக்களையும், ஒத்தியைவுகளையும் வெளிப்படுத்தி வந்த போதும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்கள் தமது கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு தமிழின அழிப்பை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தலைவர்களாக மாற்றம் பெற்றது நாம் தெரிந்ததே.

ஆகவே சிங்கள மக்கட் தலைவர்கள் எந்தளவு மனிதாபிமானம் உடையவர்களாக இருந்தாலும் இனவேற்றுமையின் பொறிகளுக்குள் சிக்கி விட்டால் அவர்கள் மனிதாபிமான நடுவிலிருந்து வழுகிவிடுகின்றார்கள். அதற்கு பதிலாகத் தமிழர்கள் இனவாதம் பேசுவதால்த்தான் தாமும் பேசுவதாகக் கூறுகின்றார்கள்.

உரிமைக்காக குரல்கொடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களை சிறையில் அடைக்க வேண்டும், ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் எனச் சிலர் சிங்கள பேரினவாதிகளாக மாறிக் கொக்கரிக்கின்றார்கள்.

எமது உரிமைக்காக நாம் குரல் கொடுக்கின்ற போது இனவாதம் பேசுகின்றோம், சிங்கள மக்களைச் சினமடையச் செய்கின்றோம், இந்த நாட்டில் மீண்டும் ஒரு முறை இனக்கலவரங்களை உண்டாக்குவதற்கு முயற்சிக்கின்றோம் என்று கூறுகின்றார்கள். தமிழ் மக்களை அடக்கியாள முயற்சித்து அவர்கள் அது சார்பாக நடவடிக்கைகள் எடுப்பதை நாம் கண்டும் காணாதது மாதிரி இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றார்களா?

இலங்கைத்தீவு சிங்கள மக்களுக்கு மட்டும் சொந்தமானதொரு தீவாக மாற்றப்பட வேண்டும் என்பதையே அனைத்து அரசுகளும் தொடர்ந்து முன்னெடுத்துவருவதாகத் தெரிகின்றது. அவர்கள் தரும் உரிமைகளை மட்டுமே நாங்கள் பெறலாம்.

ஹிட்லரின் படுகொலைகள் யூதர்களுக்கு எவ்வாறு விடுதலை உணர்வை போதித்ததோ அதே போன்று முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ் மக்களுக்கு தமது நிலையை உணர வழி வகுக்க வேண்டும். நாம் தொடர்ந்தும் எம்மிடையே பகைமை உணர்வுகளையும் அரசியல் போட்டி பொறாமைகளையும்,காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியர்களாகக் காலத்தை ஓட்டுவதையும் நிறுத்த வேண்டும்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மூலமாக தூய்மையான வரலாறு ஒன்றை தமிழ் மக்கள் இனியாவது படைக்க முன்வர வேண்டும். அதுவரை எத்தனை இடையூறுகள் வரினும் அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராகிக்கொள்ள வேண்டும் என்பதை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

(அத தெரண)