கலைஞர்களான சமனலி, இந்திரசாபா ஆகியோருக்கு பிடிவிராந்து

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கலைஞர்களான சமனலி, இந்திரசாபா ஆகியோருக்கு பிடிவிராந்து

பிரபல சிங்கள திரைப்பட நடிகை சமனலி பொன்சேகா மற்றும் பாடகர் இந்திரசாபா லியனகே ஆகியோரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை இரண்டு கலைஞர்களும் உதாசீனம் செய்த காரணத்தினால் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்கு ஒன்றில் முன்னிலையாகத் தவறியதாக தெரிவித்து நேற்று குருணாகல் நீதவான் கீதானி விஜேசிங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அலுத்பரபுர அமைப்பினர் மீது வடமேல் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குருணாகல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினமும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன.

வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் கமல் இந்திக்க உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த போதிலும்> முறைப்பாட்டின் இரண்டாம் சாட்சியாளர் சமனலி பொன்சேகா மற்றும் ஐந்தாம் சாட்சியாளர் இந்திரசாபா லியனகே அகியோர் நீதிமன்றில் நேற்று முன்னிலையாகியிருக்கவில்லை.

முறைப்பாடு செய்த தரப்பின் சாட்சியாளர்கள் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய காரணத்தினால் அவர்களுக்கு எதிராக நீதவான் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.