கோத்தபாய உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் காப்பாற்றபட வேண்டியவர்களாம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கோத்தபாய உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் காப்பாற்றபட வேண்டியவர்களாம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட படைவீரர்கள் தவறிழைத்திருந்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டுமென வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

கொடிய போரின் போது உயிரை பணயம் வைத்து செயற்பட்ட பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட படையினர் கைகளில் ஏதேனும் தவறு இழைக்கப்பட்டிருந்தாலும், அந்தத்தவறுகளுக்கு விசேட மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.

படைவீரர்கள் ஏதேனும் குற்றம் இழைக்கப்பட்டிருந்தாலும், போர் வெற்றி மூலம் ஈட்டப்பட்ட நன்மைகளுடன் ஒப்பீடு செய்யும் போது அந்த குற்றங்கள் மிகச் சிறியனவேயாகும்.

இராணுவப் புலானய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் பொலனறுவையில் சுட்டுக்கொல்லப்பட்டமை, துணைப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட ஏழு உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் இன்றும் நினைவை விட்டு அகலவில்லை.

பொலனறுவையில் பிறந்து அதே இடத்தில் வளர்ந்த எனக்கு பயங்கரவாதத்தின் பாதிப்புக்கள், எல்லைக் கிராம மக்கள் கொல்லப்பட்டமை போன்றவற்றை எளிதில் மறந்து விட முடியாது.

இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டு எடுத்த படைவீரர்கள் நடத்தப்படும் விதம் குறித்து எனக்கு பெரியளவில் உடன்பாடு கிடையாது என முதலமைச்சர் பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி, நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கடற்படையினரை அழைத்து விசாரணை நடத்தியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டமை குறித்து ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.