பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளும் கட்சியின் உறுப்பினர் இந்திக அனுருத்த, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பு செய்தமைக்கு ஆகக்கூடுதலான அர்ப்பணிப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே செய்தார் என்றார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிரணியினர், பெயரைப் போட்டுக்கொள்ள முயலுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய சஜித் பிரேமதாஸ, தற்கொலைக் குண்டுத்தாக்குல்களால் சேதமடைந்த, கொச்சிக்கடை புனித அந்தோனியார், கட்டுவாப்பிட்டிய, சீயோன் ஆகிய தேவாலயங்களுக்கு நாங்கள் என்ன செய்தோம் எனக் கேளுங்கள். இதுதொடர்பில், ஆண்டகை மல்கம் ரஞ்சித்துக்கு நன்றாக தெரியும்.
எவ்வாறான புனரமைப்பு வேலைகளை நாங்கள் செய்தோம் என்பது தொடர்பிலான பட்டியலை நான், பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன். அது பொய்யென நிரூபிக்கப்படுமாயின், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மட்டுமன்றி, எனது எம்.பி பதவியையும் இராஜினாமா செய்வேன் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.