சமஷ்டி என்பதை சிங்கள மக்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் – விக்னேஸ்வரன்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சமஷ்டி என்பதை சிங்கள மக்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் – விக்னேஸ்வரன்

சமஷ்டி தீர்வை பிரிவினை வாதம் என தென்னிலங்கை தலைவர்கள் சிலர் போதித்துக் கொண்டிருப்பதனால், சமஷ்டி தீர்வை குறித்து சிங்கள மக்கள் தவறான கருத்துருவாக்கத்தை கொண்டிருக்கிறார்கள் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்.வந்த சுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்ச ர் மார்க்கொட் வால்ஸ்டொம் தலைமையிலான குழுவினர் காலை 11.30 மணிக்கு முதலமைச்சரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

குறித்த பேச்சுவார்த்தையிலேயே குறித்த விடயத்தை தாம் சுட்டிக்காட்டியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

சுவீடன் நாட்டின் தூதரகம் இலங்கையில் இல்லை. டில்லியிலேயே உள்ளது. இருந்த போதும் அவர்கள் இங்கே வந்திருந்தார்கள்.

இலங்கை நடுத்தர வருமானத்தை பெறும் நாடு என்ற வகையில் தங்களால் எந்த உதவிகளையும் செய்ய முடியாது என அவர் எமக்கு கூறினார்.

இந்நிலையில் நாங்கள் கூறியிருந்தோம், இலங்கை நடுத்தர வருமானத்தை பெறும் நாடாக இருக்கலாம். ஆனால் வடமாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் அதிக உதவிகள் தேவை என்ப தை கூறியிருக்கிறோம்.

மேலும் ஆட்சி மாற்றத்தின் பின் இங்கே பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளமையினை நாம் ஒத்துக் கொண்டோம்.

இதேபோல் அரசியல் ரீதியாக எவ்வாறான ஒரு தீர்வு வேண்டும் என கேட்டிருந்தார்கள். அதற்கு நாம், எமது மக்கள் சமஸ்டி முறையிலான தீர்வு வேண்டும் என்பதை கேட்டுள்ளதாக என கூறினோம்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், சமஷ்டியை தென்னிலங்கை மக்கள் விரும்புகிறார்களா? என அவர் எங்களிடம் கேட்டார்.

இதற்கு நாம் பதிலளிக்கையில், சமஷ்டி பிரிவினை வாதம் அல்ல. பிரிவினை வாதம் என தென்னிலங்கை தலைவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். அதனாலேயே இந்த முரண்பாடு என்பதை கூறியுள்ளோம்.

இந்நிலையில் வெளிநாட்டு பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும்? என கேட்டார்கள். அதற்கு வெளிநாட்டு பங்களிப்பு தேவை என்பதை கூறியுள்ளோம் என்றார்.

வடகிழக்கு இணைப்பு தொடர்பாக முதலமைச்சர் மீது ஜே.வி.பி முன்வைத்த விமர்சனம் தொடர்பாக கேட்டபோது,

வடகிழக்கு இணைப்பை நீதியரசராக இருந்து கொண்டு கேட்பது தவறு என கூறப்படுகிறது. ஆனால் தீர்ப்பில் சரத் சில்வா குறிப்பிட்டுள்ளார் வடகிழக்கு ஒன்றாக இருப்பதில் சில நடைமுறை தவறுகள் உள்ளன.

எனவே பிரிக்கப்படுகிறது. ஆனால் வடக்கு, கிழக்கு இணைய விரும்பினால் இணையலாம் என கூறப்பட்டுள்ளது.

எனவே தீர்ப்பை சரியாக புரியாமல் பேசுகிறார்கள் என்றார்.