சர்வதேசத்தைப் பகைத்துக் கொள்ளும் அணுகுமுறை நல்லதல்ல

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சர்வதேசத்தைப் பகைத்துக் கொள்ளும் அணுகுமுறை நல்லதல்ல

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 வது அமர்வு கடந்த வாரம் ஜெனீவாவில் ஆம்பமானது.

ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வுகள் குறித்து இலங்கை 2010 ம் ஆண்டு தொடக்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

இவ்வமர்வில் இலங்கை தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுவதும் இதற்கான அடிப்படைக் காரணமாகும்.

அதாவது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கைக்கு எதிராக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனால் தான் இலங்கை விவகாரம் குறித்து ஐ. நா மனித உரிமைப் பேரவையில் கவனம் செலுத்தப்படுகின்றது.

இதனையொட்டித்தான் இலங்கையும் இவ்வமர்வு குறித்து அதிக கவனம் செலுத்துகின்றது.

கடந்த ஆட்சியாளர்கள் ஐ. நா மனித உரிமைகள் பேரவையுடன் தவறான அணுகுமுறையையே கடைப்பிடித்து வந்தனர்.

இதன் காரணத்தினால் 2011 முதல் 2014 இறுதி வரையும் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த நகர்வுகள் இலங்கைக்குப் பாதகமாகவே அமைந்து வந்தன.

இது இலங்கையை வீழ்ச்சியின் அதல பாதாளத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தது.

இவ்வாறான சூழலில்தான் 2015 ஜனவரி 09ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சர்வதேச நகர்வுகளுக்கு ஏற்ப அரசாங்கம் நகர்வுகளை முன்னெடுக்க ஆரம்பித்தது.

இதன் பயனாக ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறையில் மாத்திரமல்லாமல் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக்கு கொண்டு வந்த ஐக்கிய அமெரிக்காவின் அணுகுமுறையிலும் நெகிழ்வுத்தன்மை தொடங்கியது.

அதனடிப்படையில் கடந்த வருடம் அமெரிக்கா இலங்கைக்கு அனுசரணையாக ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றியது.

ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் ராத் ஹுசைன் இவ்வருடம் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயமும் மேற்கொண்டார்.

இவ்வாறான சூழலில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 32 வது அமர்வு கடந்த வாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த அமர்வில் இலங்கை தொடர்பில் ஆணையாளர் ராத் ஹுசைன் நேற்று வாய் மூல அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு ஏற்கனவே ஏற்பாடாகி இருந்தது.

இவ்வாறான நிலையில் இந்த அறிக்கையின் முன்கூட்டிய வடிவமொன்று நேற்றுமுன்தினம் வெளியானது.

அவ்வறிக்கையில் இலங்கை தொடர்பாக பல முன்னேற்றகர விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இணக்கப்பாட்டு அரசாங்கம் பதவிக்கு வந்தது முதலான கடந்த 18 மாத காலப் பகுதியில் மேற்கொண்டுள்ள பல்வேறு வேலைத் திட்டங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் ராத் ஹுசைன் பெரிதும் வரவேற்றுள்ளார்.

குறிப்பாக அரசியலமைப்பை மாற்றுவதற்காக அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ள ஆணையாளர் ஹுசைன், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவென அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல வேலைத் திட்டங்களையும் பாராட்டியுள்ளார்.

அவற்றில் பல தசாப்தங்களுக்குப் பின்னர் நாட்டின் தேசிய கீதம் சிங்கள, தமிழ் மொழிகளில் பாடப்பட்டமை, யுத்த வெற்றி விழாக் கொண்டாட்டம் நினைவு கூரல் வைபவமாக மாற்றப்பட்டமை, தம்மைப் படுகொலை செய்ய வந்த எல். ரி. ரி. ஈ. சந்தேக நபரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தமை உள்ளிட்ட பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் ஒருவர் மீது மற்றொருவர் நம்பிக்கை கொள்வதற்கு வழிவகுக்கக் கூடிய நிகழ்வுகளாக அமைய முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கை,

இறுதி யுத்தத்தின் போது கொத்துக் குண்டுகள் பாவிக்கப்பட்டமைக்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அவை தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணை நடாத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு மனித உரிமைகள்’ ஆணையாளர் அலுவலகம் நடாத்திய விசாரணை அறிக்கையில் கொத்துக் குண்டுகள் குறித்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை சார்பில் கலந்து கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,

இறுதி யுத்தத்தின் போது அவ்வாறு நடந்திருக்குமென நாம் நினைக்கவில்லை. அவ்வாறு இடம்பெற்று இருந்தால் அது குறித்து விசாரணை நடத்தத் தயார் என்று இராஜதந்திர முறையில் அறிவித்துள்ளார்.

இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக எடுத்து நோக்கும் போது இணக்கப்பாட்டு அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் விவகாரத்தை சர்வதேச நகர்வுகளுக்கு ஏற்ப முன்னெடுத்து வருவதை நன்கு அவதானிக்க முடிகின்றது.

நாட்டின் மீது உண்மையில் பற்றுக் கொண்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்.

இதைவிடுத்து சர்வதேசத்துடன் முரண்பட்டு சர்வதேசத்தைப் பகைத்துக் கொள்ளும் வகையில் ஒரு போதும் அமையக் கூடாது.