சர்வாதிகார தலைவருடன் கைகோர்க்கும் மஹிந்த

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சர்வாதிகார தலைவருடன் கைகோர்க்கும் மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கடந்த வாரம் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் தோல்வியின் பின்னர் இலங்கையிலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு முதல் தடவையாக பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இருவரும் பயணத்தை மேற்கொண்டதன் நோக்கம் வெவ்வேறானதாகக் காணப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் அழைப்பை ஏற்று ஊழல் எதிர்ப்பு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்றார்.

கடந்த பத்து வருடங்களாக பிரித்தானியா உட்பட ஐரோப்பாவில் நடைபெற்ற எந்தவொரு மாநாட்டிற்கும் இலங்கை அரச தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

தூதுவராலய தொடர்புகள் தவிர்ந்த எந்த உத்தியோக பூர்வ மாநாடுகளுக்கும் அமெரிக்காவோ, ஐரோப்பாவோ இலங்கை அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

ஆனால் தற்போதைய ஜனாதிபதிக்கு அவ்வழைப்பு கிடைக்கப் பெற்றதன் காரணம் நாட்டில் நிலவும் நல்லாட்சியே என்பது தெள்ளத் தெளிவாகின்றது.

2015ம் ஆண்டு தேர்தல் வெற்றியின் பின்னர் இலங்கையில் நடைபெற்றுள்ள ஜனநாயக நல்லிணக்க அரசியல் மாற்றங்களை அவதானித்த ஐரோப்பிய நாடுகள் இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பை விடுத்துள்ளன.

ஜனாதிபதிக்குக் கிடைத்த அழைப்பு இலங்கையர்களுக்கு கிடைத்த ஒரு கௌரவமாகக் கருதப்படுகிறது.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த விஜயம் செய்த உகண்டா ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளினால் ஒதுக்கப்பட்ட ‘நொடோரியஸ்’ இராச்சியமாகும்.

உகண்டா என்பது இடி அமீன் என்னும் சர்வாதிகாரியால் ஆட்சி செய்யப்பட்ட பின்தங்கிய நாடாகும். இடி அமீனுக்குப் பின்னரும் அங்கு ஜனநாயகம் ஸ்தாபிக்கப்படவில்லை.

சம்பிரதாயத்துக்காக தேர்தல் நடைபெற்ற அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாக செமெரி கஜூடா முஸவேனி உள்ளார். அவர் 1986ம் ஆண்டிலிருந்து ஜனாதிபதியாகவுள்ளார்.

அந்நாட்டின் அரசியலமைப்பின்படி ஒருவர் எத்தனைமுறை வேண்டுமானாலும் ஜனாதிபதி அபேட்சகராகப் போட்டியிடலாம்.இலங்கையிலும் அவ்வாறான அரசியல் நிலைமை முன்னர் காணப்பட்டது.

முப்பது வருடங்களாக தொடர்ந்தும் ஆட்சி செய்யும் உகண்டா ஜனாதிபதிக்கு தேர்தலில் அவர் 61 வீத வாக்குகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதனை அந்நாட்டு எதிர்க்கட்சியினர் மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஐரோப்பிய சங்கத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

பிரித்தானியாவில் நடைபெற்ற ஊழல்எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றபோது முன்னாள் ஜனாதிபதி முறைகேடு செய்து ஆட்சியைக் கைப்பற்றிய ஒருவரின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றார்.

இதிலிருந்து இருவரினதும் நல்லாட்சியை தெரிவு செய்யும் முறை புரிகின்றதல்லவா? மைத்திரிக்கு பிரித்தானியாவில் கோலாகல வரவேற்பு அழிக்கப்பட்டது.

அதேநேரம் உகண்டா சென்ற மஹிந்தவினால் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ளாதவர்களினதும், அவரின் பதவிப் பிரமாணத்தை எதிர்ப்போரினதும் எதிர்ப்புக் கூரல்களையே காணக்கிடைத்தது.

அதோடு உகண்டா ஜனாதிபதி முசலேனி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் திஸாபோசாகாயி உள்ளிட்டோரை சிறையிலடைத்து பதவிப் பிரமாணம் செய்தார்.

எமது நாட்டில் 2010 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தோல்வியடைந்த பின்னர் அவருக்கு நேர்ந்த நிலைமையை ஒத்ததாகவே உகண்டா நிலைமை இருந்தது.

அந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. சர்வதேச கண்காணிப்பாளர்கள், ஐரோப்பிய சமூகம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளும் இதனையே கூறுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த விஜயம் செய்த நாடான உகண்டா சர்வதேச அரங்கில் ஒதுக்கப்பட்ட, ஜனநாயகத்தை உறுதி செய்யாத ஆபிரிக்கா சங்க நாடுகளாலும் ஒதுக்கப்பட்ட ஒரு நாடாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால இங்கிலாந்தில் நடந்த ஊழல் விரோத மாநாட்டுக்கு அழைப்பினைப் பெற்றது ஜனநாயகத்தை மதிக்கும் அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் ஒரு தலைவர் என்ற ரீதியிலாகும்.

இலங்கையில் ஊழல் மிகுந்த அரசியல் மற்றும் பயங்கரவாத, மனித உரிமைகள் மீறல் போன்ற பல மோசமான குற்றச்சாட்டுகள் மிகுந்த காலமொன்று காணப்பட்டது.

மக்கள் அதற்கு எதிராக வாக்களித்ததன் பயனாக 2015 ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.அதன் காரணமாக இலங்கை மக்கள் ஏகாதிபத்திய ஊழல் நிறைந்தவர்களின் அதிகாரத்திலிருந்து மீண்டனர்.

தற்போது இலங்கையில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கமே அமைந்துள்ளது.

நாம் ஜனநாயகத்தை நல்லாட்சியை மற்றும் சட்ட அதிகாரங்களை பாதுகாக்கும் அரசாங்கம் என நம்பியே மக்கள் எமக்கு வாக்களித்தார்கள். அதனால் ஊழலை ஒழிப்பதே எமது தலையாய கடமையாகும். அதற்காக நாம் முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

19வது அரசியல் சட்டத்தை அறிமுகம் செய்து அதன்மூலம் ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம் என்பதை இம் மாநாட்டில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறுகிய காலத்தில் இந்நாட்டில் ஜனநாயகத்துக்காக செய்த புனர்நிர்மாணங்களைப் பற்றி அம்மாநாட்டில் கூறினார்.

ஆனால் மஹிந்த உகண்டாவில் என்ன சொன்னார் என அறிக்கைகள் இல்லை.

உகண்டா ஜனாதிபதி தனது பதவிப் பிரமாண நிகழ்ச்சிக்கு ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கும் தன்னுடைய நெருக்கமானவர்களுக்குமே அழைப்பு விடுத்திருந்தார்.

அப்படியென்றால் ஆசியாவில் அவருக்கு நெருக்கமானவர் முன்னாள் ஜனாதிபதியா? முன்னாள் ஜனாதிபதி அந்த அழைப்பை ஏற்றதும் ஏன் என்று தெரியவில்லை?

இந்த அழைப்பின் மூலம் உகண்டா ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதியை தனக்கு சமமானவரென எண்ணுகின்றாரோ! ஆனால் மஹிந்தவின் அரசியல் வாழ்வுக்கு இது சிறந்ததல்ல.

தலைவர்களின் அரசியல் எப்படி இருந்தாலும் எமது நாட்டு மக்களின் அரசியல் அறிவும், சர்வஜன வாக்குரிமையை பாவிக்கும் முறையும் உகண்டாவை விட உயர் மட்டத்திலேயே காணப்படுகின்றன.

அதனை உறுதி செய்யும் முகமாக 2015 ஜனவரி 8ம் திகதி வாக்களித்து இந்நாட்டில் பெற்றுக்கொண்ட புரட்சிகரமான வெற்றி உலகுக்கே தெரிந்திருக்கும்.

அன்று மக்கள் வாக்களிப்பின் மூலம் இந்நாட்டில் பிரிவினை என்னும் பயங்கரவாதத்தை ஒழித்த தலைவரையே தோல்வியடையச் செய்தனர். அது மக்கள் மனதில் மறையாத நிகழ்ச்சியாகும்.

ஆனால் அவரின் பரிபாலனம் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரான செயல்பாடுகள் காரணமாக அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

அதுமட்டுமல்ல பிரிவினை வாதத்துக்கு காரணமான விடயங்களை ஜனநாயக மற்றும் திறந்த மனதுடன் நோக்காததும் அவரின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

அரசனானாலும் பேரரசனானாலும் ஏகாதிபத்தியவாதியாக நடந்து கொண்டால் தேர்தல் வாக்களிப்பின் மூலம் மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கவே வேண்டும்.

எங்கள் நாடு உகண்டாவைப் போலல்லாது ஜனநாயகத்தால் முன்னேறிய நாடுகளின் தரத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பின் உரிமையைக் கொண்டுள்ளது.

“நான் தலைவனல்ல… உங்கள் சேவகன்” என்று அரசியல் தலைவர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு.

ஆனால் இலங்கை மக்களை அதன் மூலம் ஏமாற்ற முடியாது என்பதை 2015 ஜனவரி 8ம் திகதி தேர்தல் வெற்றியை குறிப்பிடலாம்.

முன்னாள் ஜனாதிபதி தனது நாட்டு மக்கள் கற்றுக் கொடுத்த பாடத்தை உகண்டா ஜனாதிபதிக்கு உணர்த்தி ஜனநாயக வழியில் செல்ல வழிகாட்டுவாரா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து முழு உலகிற்கும் உதாரண புருஷராகத் திகழ்கின்றார்.

அதுமட்டுமல்ல 19வது அரசியலமைப்புச் சட்ட திருத்தம் மூலம் ஜனநாயகத்தை காக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அவர் லண்டன் நகரில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு தன்னுடைய அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இதன்மூலம் எமது நாட்டை ஜனநாயகத்தை பின்பற்றும் ஒரு நாடாக உலக அரங்கில் உயர்த்துவதற்கு அவரால் முடிந்துள்ளது. இது நாட்டு மக்களாகிய நாம் பெற்ற வெற்றியாகும்.