சவூதியிலும் யேமனிலும் கடும் மழை; 42 பேர் பலி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சவூதியிலும் யேமனிலும் கடும் மழை; 42 பேர் பலி

யேமன் மற்றும் சவுதி அரேபியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழைக்கு 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு யேமனில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 24 என்று அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் சனாவுக்கு வடக்கே உள்ள அம்ரான் மாகாணத்தில் மாத்திரம் 10 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.

ஹஜ்ஜா மாகாணத்தில் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரு மாகாணங்களிலும் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் அல்-மாஹவித் மாகாணத்தில் அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் பாலங்கள் பல சேதமடைந்துள்ளன.

இதேவேளை, சவுதியில் மழைக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 18 என அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் ரியாத் உள்ளிட்ட ஹெயில், மெக்கா, மதீனா, அல்-பாஹா, ஆசிர், நஜ்ரான், ஜஸான் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளிலிருந்து 915 பேர் மீட்கப்பட்டனர். அல்-பாஹா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

பலத்த மழை காரணமாக ரியாத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரானிலும் இருவர் மழை வௌ்ளத்தால் பலியாகியுள்ளனர்.