சிங்களக்குடியேற்றங்களை தற்போதைய அரசு பலப்படுத்துகின்றது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சிங்களக்குடியேற்றங்களை தற்போதைய அரசு பலப்படுத்துகின்றது

வடக்கு கிழக்கில் 67 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் விடுவிக்கப்படாமல் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது என நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியிடம் வவுனியா பிரஜைகள் குழு சார்பில் என்.முதிகரன், கே. அருந்தவராஜா, கே. பரமேஸ்வரன் ஆகியோர் தமது கருத்துக்களை உள்ளடக்கி மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தன.

நிலைபேறான ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணல் உள்ளிட்ட இலங்கை தீவில் காணப்படும் அனைத்து பிரச்சினைகள், முரண்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வாக்குறுதிகளை வழங்கி எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் தேசிய அரசாங்கமாக இரு பெரும்பான்மை கட்சிகளும் ஆட்சி அமைத்துள்ளன.

இந்த ஆட்சி ஜனநாயக வெளியை ஏற்படுத்தியுள்ள நல்லாட்சி என அடையாளம் காட்டப்படுகின்றது. இலங்கையில் தற்போதைய ஆட்சியாளர்களால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான வரலாற்றில் இதுபோன்ற பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. மக்கள் கருத்தறியும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பாக மக்ஸ்வெல் பரணகம தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் அதன் பரிந்துரைகள் உள்ளிடங்கிய அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

அதற்கு முன்னதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப்பட்டு அக்குழுவும் தனது பரிந்துரைகள் அடங்கிய பூரண அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இவை அனைத்தும் 2009இற்குப் பின்னரான காலப்பகுதில் அமைக்கப்பட்டவையாக இருப்பதோடு பரிந்துரைகள் வழங்கப்பட்ட பின்னரும் நிலைமைகள் எவ்வாறிருக்கின்றன என்ற அனுபவத்தை வழங்கிக்கொண்டு எம்முன்னாள் உள்ளன.

ஒரு விடயம் சார்பாக அரசாங்மே ஆணைக்குழுவை நியமிக்கின்றது. மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்கின்றது. அதனடிப்படையில் ஆணைக்குழு முன்னால் மக்கள் கூறுகின்ற கருத்துக்களும், அவற்றின் அடிப்படையில் ஆணைக்குழு ஆராய்ந்தறிந்து இறுதி செய்த பரிந்துரைகளும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

2009இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான காலப்பகுதியில் ஏன் யுத்தம் நடைபெற்றது என்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. முதலாவதாக ஜனநாயக ரீதியிலான போராட்டமாகவிருந்தாலும் சரி, ஆயுத ரீதியிலான போராட்டமாகவிருந்தாலும் சரி பல்லின நாட்டில் போராட்டம் ஒன்று ஏற்படுவதற்கான ஆணிவேர் எது என்பதனை சிங்களத்தரப்பு சரியாகப் புரிந்து கொண்டிருக்கின்றதா என்பதை தற்போது வரையில் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

இவ்வாறு புரியாத புதிராக நிலைமை இருக்கையில் இலங்கையின் தேசிய இனமாக தமிழ் மக்களை அங்கீகரித்து அவர்களின் அரசியல் பொருளதார, சமுக அபிலாஷைகளை அங்கீகரித்து தமிழ்மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எவ்வாறு வழிவகை எடுக்கப்படும் என்பது பிரதான ஐயப்பாடாக இருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசினால் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்த தமிழ்மக்கள் அதற்கு மாற்றாக தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய, தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய அரசும், அரசுத்தலைவரும் வேண்டும் எனும் நோக்கில் இன்றுள்ள கௌரவ ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அணியை ஆதரித்து வாக்களித்தனர்.

ஆட்சிக்கு வந்தபின்னர் இந்த நல்லாட்சி அரசினர் தமிழ்மக்களுக்கான எந்தவொரு நல்ல சமிக்ஞைகளையும் காட்டவில்லை. நிலைமைகள் அவ்வாறே தான் இருக்கின்றன. ஆனால் கண்துடைப்புக்காக மாறாக கடந்த அரசின் சில செயற்றிட்டங்களையும், வேலைத்திட்டங்களையும் நிறைவு செய்துகொண்டிருகின்றனர்.

வடக்கு கிழக்கில் அரசகாணிகளும், தனியார் காணிகளும், கட்டடங்களுமாக சுமார் 67 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் விடுவிக்கப்படாமலேயே இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அரசகாணிகளில் சிங்கள மக்களை அரசு தனது நல்லாசியில், பாதுகாப்புடன் குடியேற்றி வருகிறது. அண்மையில் கொக்கச்சான்குளம் என்ற கிராமம் கலாபொபஸ்பெவேவ 1, கலாபொபஸ்பெவேவ 2, நாமல்கம என்று மூன்றுகிராமங்களாக பெயர் மாற்றப்பட்டு 3000க்கு மேற்பட்ட சிங்கள மக்கள் அங்கு அரசினால் குடியேற்றப்பட்டுள்ளனர்.

வவுனியா, கொக்குவெளியில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுடன் குளப்பகுதியும் ஆக்கிரமிக்கப்படுகின்றது.

கொக்குவெளி என்பது சிங்களத்தில் கொக்கெலிய என்று பெயர் மாற்றப்பட்டு வருகின்றது. தமிழர்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு இராணுவ முகாம் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் தச்சனாங்குளத்தில் தமிழ் மக்களின் காணிகள் தற்போது ஆக்கிரமிக்கப்படுகின்றது. கட்டிடம் ஒன்று கட்டப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரிக்கு மைதானம் அமைப்பதற்காக கோரப்பட்ட காணி மற்றும் இறம்பைக்குளம் மயானம் என்பன தற்போதும் வான்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மத கிரியைகளை கூட சுதந்திரமாக செய்ய முடியாத வகையில் உள்ளது. வான்படையினரிடம் அனுமதி பெற்றே சடலங்களை கூட எரிக்கவும் தாட்கவும் வேண்டியுள்ளது. இப்பகுதி முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.

கொக்கடிவான் குளத்திற்கு அருகில் விவசாயம் செய்யக் கூடிய வகையில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தால் அபிவிருத்தி செய்யப்பட்ட இருநூறு ஏக்கர் வயல் நிலத்தை அங்கிருந்த தமிழ் குடும்பங்களை விரட்டிவிட்டு 165 சிங்கள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் வசிக்காத வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பௌத்த விகாரைகளும், புத்தர் சிலைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர்சிலை அமைக்கப்படுமென ஜனாதிபதியே அறிவித்துள்ளார். அதற்கான அடித்தளமும் இடப்படுகின்றது.

யாழ். நகரின் நுழைவாயிலான நாவற்குழியில் ‘சிங்கள ராவய’ என்ற பெயரில் சிங்களக் குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலத்திலேயே இக்கிராமத்துக்கு சிங்கள ராவய என்ற பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டுள்ளது. சிங்கள ராவய என்பது புத்த பிக்குகளால் பௌத்த மதத்தை பரப்புவதற்காக வழிநடாத்தப்படும் கடும்போக்கான ஒரு அமைப்பு ஆகும்.

அப்பெயரே இக்கிராமத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. நாவற்குழி புகையிரத நிலையத்தை அண்டிய பிரதேசம் அனைத்தும் சிங்களக் குடியிருப்பாக விரிவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சிங்களக் குடியிருப்பில் பாடசாலை, பௌத்த விகாரை போன்றவை கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

போர் நிறைவுற்றதும் 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி 193 சிங்களக் குடும்பங்கள் சிறீலங்கா இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்டு அப்போது கைவிடப்பட்டிருந்த புகையிரத நிலைய பிரதேசத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

குறித்த சிங்களக் குடியேற்ற வாசிகள் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் தாம் அப்பிரதேசத்தில் வசித்து வந்ததாகக் கூறிவருகின்றனர். ஜனகபுர, சிங்கபுர, 13ஆம் கொலனி என்று முல்லைத்தீவின் எல்லையில் சில சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க சிங்களப் பெயர்பலகைகள் என்று சிங்களக் கிராமமாகவே மாறிவிட்டது.

13ஆம் கொலனிப் பகுதியை அண்டி இப்பொழுது புதிதாக சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை திருகோணமலையின் தென்னைமரவாடியை நோக்கி நகர்கின்றன. சிறிய சிறிய மண் வீடுகள் தகரங்களால் வேய்ந்ததபடி அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 13ஆம் கொலனியில் வலிந்து குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் முப்பது வருடப் போரால் இன வன்முறையால் பாதிக்கப்பட்ட தென்னை மரவாடி மக்கள் இன்னமும் தற்காலிக வீடுகளில்தான் வசிக்கின்றனர்.

ஒதிமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் கஜபாகுபுர ஆக்கப்பட்டுள்ளன.

சிலோன் தியேட்டர், டொலர்ஸ் பாம் என்பனவும் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதியிலிருந்து ஒதியமலை பகுதியை நோக்கி நாளும் பொழுதும் ஒரு வீடு என்ற வகையில் சிங்களக் குடியேற்ற முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. வவுனியா மாவட்டத்தின் எல்லைப் புறம் முழுவதும் சிங்களக் குடியேற்றங்களால் சுற்றி வளைக்கப்படுகின்றது.

வவுனியாவில் மன்னார் மதவாச்சி வீதியை அண்டிய பகுதிகளிலும் இவ்வாறு குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மன்னார் முசலிப் பகுதியிலும் சிங்களக்குடியேற்றம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. திருமலை, அம்பாறை முதலிய மாவட்டங்களின் நிலைமை சிங்களக் குடியேற்றங்களால் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது. இவைகளில் பெரும்பாலானவை புதிய சிங்களக் குடியேற்றங்களாகும்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளில் தமிழ்மக்களால் இதுவரை எதுவித ஆக்கிரமிப்பும் நடைபெறவில்லை. ஆனால் இப்போது தமிழ் ஆலயங்களுக்கு பங்கம் விளைவிக்கப்பட்டு அந்த இடங்களில் புத்தவிகாரைகள் கட்டப்படுகின்றன.

அண்மையில் கிளிநொச்சி கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியை ஆக்கிரமிக்கும் வகையில் சுவர் அமைக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்படுவது இதற்கு சான்றாகும்.

இந்நடவடிக்கைகள் தமிழ் மக்கள் பாரம்பரியாக வாழ்ந்த பூமியில் அவர்களின் தனித்துவ அடையாளத்தை படிப்படியாக அழிக்கும் திட்டமிட்ட இனஅழிப்பின் ஒருபகுதியாக இரண்டறக்கலத்தல் என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் ஒரு பாரிய பௌத்த சிங்கள மேலதிக்க திட்டம் என்பதை நிரூபிக்கின்றன.

மீள்குடியேற்றம் என்ற வரையறைக்குள் மேற்கொள்ளப்படும் மற்றும் மேற்கொள்ளப்பட எத்தனிக்கப்படும் இக்குடியேற்றங்கள், இன விகிதாசாரத்தினையும் தமிழ் மக்களின் வரலாற்றுத் தொன்மையினையும் அழிக்க எத்தனிக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் அக்குடியேற்றங்களை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளேயாகும்.

அரசாங்கம் நல்லிணக்கத்தினைப் பேசினாலும் கூட கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும் தற்போது மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்கள் பற்றியும் நியாயமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அதற்கும் மேலாக கடந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட சிங்களக்குடியேற்றங்கள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் பலப்படுத்தப்பட்டும் வருகின்றன.

இன நல்லிணக்கத்தினைப் பாதிக்கும் நியாயத்திற்குப்புறம்பான சிங்கள மயமாக்கத்தின் ஊக்கியாக அரச அதிகாரம் காணப்படுவதே பிரச்சினையாகும். இந்த இடத்தில் அரசாங்கம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தற்போதும் அதற்கு முன்னரும் நடைபெற்ற ஆக்கிரமிப்புக்களுக்குரிய தீர்வை முன்வைக்க வேண்டும் எனக்கோருவது நல்லிணக்கத்திற்கான தேவையாகவேயுள்ளது.

அரசு தீர்வை முன்வைக்கும் அதே வேளை இன விகிதாசாரத்தினைப் பாதிக்கும் விடயங்களில் அது எவ்வாறு செயற்படப் போகின்றதென்பது பற்றி வெளிப்படுத்த வேண்டியதும் அவசியமாகவுள்ளது.

கடந்த 15 – 20 வருடங்களாக விசாரணை இன்றி அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றனர். அரசியல் கைதிகளாக 180பேர் இன்னும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வதாக பல தடவைகள் அரசாங்கம் தெரிவித்தபோதும் அது நடக்கவில்லை.

இதற்கு முன்னர் சில அரசியல் கைதிகளை அரசாங்கம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்திருந்தது. என்றாலும் எஞ்சியுள்ள இவர்களின் விடுதலை குறித்து இறுதி தீர்மானத்தை அரசாங்கம் எடுக்காமல் காலம் தாழ்த்தப்படுவது ஆரோக்கியமான ஒன்றல்ல.

அத்துடன் இன்று பல கொலைகளுடனும் திருட்டுச் சம்பவங்களுடனும் தொடர்பு பட்டுள்ள பலர் குறிப்பிட்ட காலம் சிறையிலடைக்கப்பட்டதன் பின்னர் விடுதலையாகியுள்ளனர். ஆனால் பலவருடங்களாக எந்த தவறும் செய்ததாக நிரூபிக்கப்படாமல் தமிழ் அரசியல் கைதிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு சென்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் குறித்து தெரிவிக்கின்றது. ஆனால் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அசமந்தப்போக்கை கடைப்பிடிக்கின்றது. இதனை நல்லிணக்கத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

குமாரபுரம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவத்தினர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களம் இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் கொலையாளிகள் யார் என்று இதுவரை அடையாளம் காண்பதற்கான எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை. தமிழ்ப்பிரதேசங்களில் தமிழ் ஊழியர்களுக்கான பற்றாக்குறை மிகப்பெருமளவில் இருக்கின்றபோது உயர்அதிகாரிகள் முதல் சாதாரண ஊழியர்வரை சிங்கள மக்களே நியமிக்கப்படுகிறார்கள். இது திட்டமிட்ட ஒரு நடவடிக்கையாகும்.

வடமாகாணத்தில் நியமிக்கப்பட்ட 361 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களில் 332 பேர் சிங்களவர்கள் ஆகும். தமிழ்பகுதியான மட்டக்களப்பில் நியமிக்கப்பட்ட 99 விவசாய ஆராய்ச்சி உதவியாளர்களில் 75பேர் சிங்களவர்கள் ஆகும். இதுபோன்ற பலநடவடிக்கைகள் ஆங்காங்கு நடைபெற்றுவருகின்றன.

வடக்கு கிழக்கில் பலபட்டதாரிகள் வேலையின்றி இருக்கும்போது இதுபோன்ற இனவாத நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதானது தவிர்க்கப்பட வேண்டும். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் அளவுக்கதிகமான சிங்கள மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது இனங்களின் சமநிலையை குலைப்பதோடு, இனமுறுகலுக்கும் வழிவகுக்கும்.

காடழிப்பு, மீள்குடியேற்றம், வேலைவாய்ப்பு, காணி அபகரிப்பு என தனது சமூகத்துக்காக தன்னிச்சையாக முஸ்லிம் அமைச்சர் ஒருவர் செயற்பட்டு வருகிறார். அரசு இதனைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. நடந்து முடிந்தனவற்றிற்குப் பரிகாரம் காணப்பட வேண்டும். போர்க்குற்ற விசாரணை உரியவாறு பாரபட்சமின்றி நடைபெற்றால்தான் தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் உருவாகும். சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

காணாமல்போனோர் தொடர்பான எமது பட்டியலில் காணப்படாதவர்களுக்கு என்ன நடந்ததென்று தெரியாதுள்ளது. அவ்வாறானவர்களில் பெருமளவானோர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றே கருதப்பட வேண்டியுள்ளதென்பதை மிகவும் கவலையுடன் கூறுகின்றேன் என்று யாழில் நடைபெற்ற தேசிய தைப் பொங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாகலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்காவில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்குவதற்கு துணை இருந்து செயற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகி, பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தவரும், காணாமல் போனோர் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொண்டவருமான பாலேந்திரன் ஜெயகுமாரி பயங்கரவாத விசாரணை பிரிவில் இன்று (16.08.16) முன்னிலையாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வின் போது புலனாய்வு பிரிவினரின் பிரசன்னம் அதிகளவில் காணப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான உண்மை நிலை இவ்வாறே உள்ளது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் திறக்கப்படுவது சரியான வழிமுறையாயினும், இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதே சிறந்த வழியாகும்.

காணாமல் போனோர் தொடர்பாக இராணுவத்தினரோ, பொலிசாரோ தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று அரசதரப்பில் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் சரியான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். ஆகவே சர்வதேச விசாரணை என்பது அவசியமாகிறது.

ஆங்காங்கு நடைபெறும் மீள்குடியேற்றம் காணிவிடுவிப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவதாக ஒரு மாயை உருவாக்கப்படுகின்றது. காணிவிடுவிப்பும், மீள்குடியேற்மும் யுத்தத்தின் பின்னரான பக்கவிளைவுகளே அன்றி இவையே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஆகாது.

புதிய அரசியல் யாப்பில் தேசிய இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு என்ற வாசகம் நீக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு திருத்தம் என்ற வாசகம் நீக்கப்பட்டுள்ளது. ஆகவே புதிய யாப்பு தொடர்பாக தெளிவற்ற தன்மையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் நீடித்திருக்கும் தேசிய பிரச்சினைக்கு இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்டையில் நீடித்த நிலையான நியாயமான அரசியல் தீர்வொன்று புதிய அரசியல் யாப்பின் ஊடாக கிடைக்கும் என எவ்வாறு பொதுமக்களாகிய எம்மால் நம்பிக்கொண்டிருக்க முடியும்.

ஐக்கிய இலங்கையை ஸ்திரப்படுத்துவதற்காக ஒற்றையாட்சி முறைமைதான் தொடர்ந்திருக்கும், சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை, வடக்கு கிழக்கு இணைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவையில் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.

யாப்பு திருத்தத்திற்கு முன்பாக தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும். அந்த அரசியல் தீர்வுத் திட்டமானது இணைந்த வடக்கு கிழக்கு, காணி பொலிஸ் அதிகாரத்துடன் கூடிய சமஷ்டிமுறை என்பவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அத்தீர்வுத்திட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கியதேசியக்கட்சி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும்.

இந்நல்லாட்சி அரசானது பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என ஐக்கியநாடுகள் சபைக்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இதுவரை அது தொடர்பான எந்த நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லை. அவை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்மக்களுக்கான மீள்குடியேற்றம், காணாமல் போனோர், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்றவை திருப்திகரமாக செய்யப்படவில்லை. இதனால் தேசிய இனங்களுக்கிடையிலான சமநிலைத் தன்மை பேணப்படவில்லை. இவற்றை செய்வதன்மூலம் தமிழ்மக்களின் மனங்களில் நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமக்கான நீதியை எதிர்பார்ப்பவர்களுக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும். அவர்கள் சமூகங்களுடன் இணைந்து வாழ்வதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும். தென்னிலங்கை தரப்புக்கள் தமிழ் மக்களின் ஜனநாயக, ஆயுத போராட்டத்தை எந்தக்கோணத்தில் பார்த்தாலும் கூட ஜனநாய ரீதியிலும், ஆயுத ரீதியிலும் தனது இனத்தின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு சுதந்திரமாக நினைவேந்தலை செய்யக்கூடிய வகையில் வடக்கு கிழக்கு மாவட்டங்கள் தோறும் நினைவுத்தூபிகள் அமைக்கப்படவேண்டும்.

அத்தோடு யுத்ததத்தின் காரணத்தால் மாற்றுத்திறனாளினகளாக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயமான நிவாரணம் மாதாந்தம் வழங்கப்படுவதோடு அவர்களின் குடும்பங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்குரிய சகலவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவேண்டியுள்ளது.

கடந்தகால இனக்கலவரங்களில் இடம்பெயர்ந்து வடக்கு கிழக்கில் குடியேறியுள்ள மலையக மக்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கான அங்கீகாரத்தை மறுதலிக்காது வடக்கு கிழக்கு வாழ் மக்களாக கருத்திற்கொண்டு உரிய தீர்வுகள் வழங்கவேண்டும். குறிப்பாக இவர்களுக்கான கல்வி, இருப்பிடவசதி, வேலைவாய்ப்பு என்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் மீள்குடியேற்றம், காணிகள் தொடர்பான பிரச்சினைகள், காணமல்போனோர் தொடர்பான விடயங்கள், அரசியல் கைதிகள், பெண்தலைமைத்துவ குடும்பங்களின் பிரச்சினைகள், சாதாரண பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினைகள், இராணுவ புலனாய்வாளர்களர், பொலிஸார் சிலரின் கடுமையான கெடுபிடிகள், திட்டமிட்ட சிங்கள, பொளத்த மயமாக்கல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு பொதுமகனும் முகங்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றான்.

ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள மற்றும் முஸ்லிம் சகோதரர்களோடு இணைந்து வாழ்வதற்கு தயாராக இருக்கின்றபோதும் மனதளவில் இன்னமும் தமிழ் மக்கள் தயாராகவில்லை. இதுவே தற்போதைய யாதார்த்தமாகவுள்ளது. ஆகவே ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனதினை வெல்லவேண்டுமனால் முதலில் ஒவ்வொரு பொது மகனும் அன்றாடம் எதிர்கொள்ளும் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை உடன் எட்டும் வகையில் ஆட்சியாளர்கள் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியது அவசியமாகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அவரது 51உறுப்பினர்கள் அடங்கிய ஒன்றிணைந்த எதிரணியையும் காரணம் காட்டி இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காது காலதாமதப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இலங்கை தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக மக்களின் கருத்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக மேற்குறித்த பிரச்சினைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது நம்பிக்கையளிக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவேண்டும். அதற்கு நல்லாட்சி அரசாங்கத்திற்கு போதிய கால அவகாசம் இருந்துள்ளது.

ஆகவே 16மாதங்கள் கடந்தோடி விட்ட நிலையில் அத்தகைய நிலைமைகள ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எவையும் ஆக்க பூர்வமான முறையில் முன்னெடுக்கப்படாத நிலையில் நல்லிணக்கம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள முயல்வதானது ஏற்கனவே முரண்பாடுகளால் சந்தேகமும் அச்சமும் வலுத்து பெரும் இடைவெளியில் காணப்படும் சிங்கள, தமிழ் தேசிய இனங்களுக்கிடையிலான விரிசலானது மேலும் இடைவெளியை ஏற்படுத்துவதாகவே அமையும்.

காரணம் அன்றாடம் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் மனவேதனையின் உச்சத்தில் இருக்கும் தமிழர்கள் நல்லிணக்கம் சம்பந்தமாக கருத்துரைக்கும்போது சிங்கள, பௌத்த தரப்பின் மீது காட்டமான கருத்துக்களையே வெளிப்படுத்துவார்கள்.

ஆகவே இது நல்லிணக்கம் பற்றி கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கே தடையை ஏற்படுத்திவிடும். எனவே அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டிய பின்னரே தான் நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்களை பெற்று கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவேண்டும் என்பது எமது நிலைப்பாடகவுள்ளது.

என்றவாறு அந்த மகஜர் அமைந்துள்ளது