சீனி இறக்குமதி வரி குறைப்பால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அம்பலம்


சீனி இறக்குமதி வரி குறைப்பால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அம்பலம்

சீனி ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்பட்டிருந்த, விசேட பண்ட வரியை, 50 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைத்ததன் மூலம், பொதுமக்களுக்கு போதுமான நிவாரணம் கிடைக்கவில்லை என்பது கணக்காய்வாளர் மேற்கொண்ட விசேட கணக்காய்வில் தெரியவந்துள்ளது.

அரச நிதி தொடர்பான குழு விடுத்த அறிவிப்பின் பிரகாரம், இந்த கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கை நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், நிதி அமைச்சினால் குறித்த விசேட பண்ட வரி குறைக்கப்பட்டதுடன், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துக்கு அப்பால், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அதிக பொருளாதார நன்மைகளைப் பெற்றதாகவும் அந்தக் கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்களிடையே, பிரமிட் வில்மா நிறுவனத்தின் சீனி இறக்குமதி 2020 ஒக்டோபர் முதல் 2021 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் மாத்திரம், நூற்றுக்கு 1,222 ஆல் அதிகரித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது அசாதாரண அதிகரிப்பாகும் என்பதுடன், ஏனைய ஏழு இறக்குமதியாளர்களின் இறக்குமதி குறைவடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், அரசாங்கம் வரியைக் குறைத்ததுடன், தனியார் இறக்குமதியாளர்களிடருந்து சீனியைக் கொள்வனவு செய்து விற்பனை செய்யும் இலங்கை சதொச நிறுவனத்திற்கு, 102 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், சீனி இறக்குமதியை மட்டுப்படுத்தும் நோக்கில், ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களம் அறிமுகப்படுத்திய அனுமதிப்பத்திர முறைமை உரியவாறு நடைமுறையாகவில்லை.

நுகர்வோர் அதிகார சபை, அவ்வப்போது சீனிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தபோதும், அதன்மூலம் சீனியின் விலை கட்டுப்படுத்தப்படவில்லை என்பது கணக்காய்வில் தெரியவந்துள்ளது.

இவ்வாறாக, வரியைக் குறைத்ததன்மூலம், அரசாங்கத்திற்கு 16,708 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, அந்த வரி வருமானத்தை தடுத்து வைத்திருக்கும் தரப்பினரை உரிய முறையில் அடையாளம் கண்டு, அதன் பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் அல்லது அதை மீண்டும் அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொள்வது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என கணக்காய்வு அறிக்கiயில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.