அரசாங்கத்தை விமர்சித்ததால் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம் ஜயந்த் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, அவர் நீக்கப்படுவது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை எனவும் தெரிவித்தார்.இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் நீக்கப்பட்டது தொடர்பில்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், அமைச்சரவை ஊடக மாநாட்டுக்கு வரும் வழியில் தான் இந்த செய்தியை அறிந்தேன்.
இது பற்றி நேற்றைய (நேற்று முன்தினம் நடைபெற்ற) அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவில்லை. ஜனாதிபதிக்கு தேவையானால் என்னை கூட நீக்க முடியும்.
அரசின் செயற்பாடுகளை விமர்சித்ததால் தான் அவர் நீக்கப்பட்டதாக எங்கும் தெரிவிக்கப்படவில்லை. அமைச்சர்களான உதய கம்மம்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் கூட அமைச்சரவை முடிவு ஒன்று தொடர்பில் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
நானும் பல அமைச்சரவைகளில் இருந்துள்ளேன். அரசின் குறைபாடுகளை விமர்சிக்க முடியும். அதற்குத் தடை கிடையாது. அவதூறு செய்வதை ஏற்க முடியாது.
சுசில் பிரேம் ஜெயந்த் அரசை விமர்சித்ததாலேயே நீக்கப்பட்டாரென்ற குற்றச்சாட்டு தவறானது. இதற்கான காரணம் ஓரிரு தினங்களில் தெரியவருமென்றும் அவர் குறிப்பிட்டார்.