சேரன் சிக்கலில்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சேரன் சிக்கலில்

காசோலை மோசடி வழக்கில், வரும் மார்ச் 10-ஆம் தேதி ஆஜராகும்படி திரைப்பட இயக்குநர் சேரனுக்கு, ராமநாதபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவர், திரைப்பட இயக்குநர் சேரனின், வீடுகளுக்கு நேரடியாக திரைப்படத்தை சி.டி.க்கள் மூலம் விநியோகிக்கும் சி 2 ஹெச். நிறுவனத்தின் விநியோகஸ்தராக நியமிக்கப்பட்டார். இதற்காக ரூ. 8.40 லட்சத்தை பழனியப்பன் வைப்புத் தொகையாகச் செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அந்த நிறுவனம் சரியாக செயல்படவில்லை எனக் கூறி பழனியப்பன் அந்தத் தொகையை திரும்பக் கேட்டுள்ளார். இதையடுத்து ரூ. 8.40 லட்சத்துக்கு சேரனும் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினியும் இணைந்து கையெழுத்திட்ட வங்கிக் காசோலை பழனியப்பனிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த காசோலையை வங்கிக்கு அனுப்பியபோது பணமில்லாமல் திரும்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து, சேரன் மீது ராமநாதபுரம் 2-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் பழனியப்பன் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில் பிப்ரவரி 11-இல் சேரன் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சேரன் சார்பில் அவரது வழக்குரைஞர் சோமசுந்தரம் ஆஜராகி, நீதிமன்ற நோட்டீஸ் கிடைக்காததால் ஆஜராகவில்லை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, வரும் மார்ச் 10-ஆம் தேதி ஆஜராகும்படி சேரனுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டார்.