ஜனாதிபதியினால் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட அன்பான வேண்டுகோள்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஜனாதிபதியினால் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட அன்பான வேண்டுகோள்

நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் எந்தவொரு வரைவுக்கும் அனுமதியோ அல்லது ஆதரவோ வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபருக்கும் எந்தவொரு பிரேரணைகளையும் நிறைவேற்றுவதற்கு உரிமை இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டைப் பிரிக்கும் பிரேரணைகளை செயற்படுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.

இன்று காலை ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், செய்திப் பணிப்பாளர்கள், செய்தி ஆசிரியர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்வாறான பிரேரணகைள் நிறைவேற்றப்பட்டவுடன் பதற்றமடையத் தேவையில்லை என்றும் கூறினார்.

தேர்தல் ஒன்று நெருங்கும் போது இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதாகவும், ஜெயலலிதாவும் இவ்வாறு செய்றபட்டு இலாபம் அடைவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

வெட்வரி அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியிடம் வினவப்பட்ட போது, பொது மக்களை பாதிக்கும் விதமாக எவ்விதத்திலும் வெட் வரி அதிகரிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி கூறினார்.

வர்த்தக துறையினருக்கே வெட் வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக வீணாக அச்சம் அடையத் தேவையில்லை என்றும் கூறினார்.

அத்துடன் சிலர் அரசாங்கத்தை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சதிகாரர்களாக செயற்படுவதாகவும், அவ்வாறான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் தான் இடமளிப்பதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

தானும் பிரதமரும் இணைந்து இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாகவும், அந்தப் பயணத்தை நாசவேலை செய்வதற்கு எவருக்கும் இடம் வழங்குவதில்லை என்றார்.

கடந்த 48 ஆண்டுகளாக தான் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலின் போது வெளியேற காரணம் கடந்த அரசாங்கத்தின் நிர்வாகமே என்றும், கடந்த அமைச்சரவையில் இருந்தவர்களுக்கும் இவை நன்கு தெரியும் என்றும் கூறினார்.

சாப்பாட்டு மேசைக்கு சென்றால் அங்கு முதலில் குடும்ப உறுப்பினர்களின் தீர்மானங்கள் மாத்திரமே பேசப்படுவதாகவும், குடும்பத்தின் 05 உறுப்பினர்கள் மாத்திரம் தீர்மானம் எடுக்கும் இடமாக அது இருந்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.

முன்னர் இருந்த மோசமான ஆட்சியில் இருந்து நாட்டைப் பாதுகாத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு அறியக் கொடுக்காமல் சில ஊடகங்கள் மோசடிக்காரர்களுக்காக முன்நிற்பது குறித்து தான் வருத்தமடைவதாக கூறினார்.

ஊடகங்கள் எப்போதும் சமநிலை தன்மையுடன் செயற்பட வேண்டிய போதும் சில ஊடகங்கள் மோசடிக்காரர்களின் தேவைக்கு ஏற்றவாறு செயற்படுவதாக கூறினார்.