முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செயற்பாட்டை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை இன்று (31) பிறப்பித்துள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி துமிந்த சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2016, செப்டெம்பர் மாதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
எனினும் 2021, ஜூன் 24 ஆம் திகதியன்று அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் ஸ்வர்ணா பிரேமச்சந்திர ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களின் விசாரணையின் போதே உயர்நீதிமன்றம் இந்த இடைக்கால தடையுத்தரவை விதித்துள்ளது.
அத்துடன் துமிந்த சில்வாவுக்கு பயணத் தடை விதித்த நீதிமன்றம் அவரது கடவுச்சீட்டை நீதிமன்றின் பாதுகாப்பில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.