ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி நடவடிக்கைக்கான காரணங்கள்!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி நடவடிக்கைக்கான காரணங்கள்!

கடந்த வாரத்தில் இலங்கையில் அரசியல் தளத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய செயற்பாடுகளே அரங்கேறின.

நல்லாட்சி நிறுவப்பட்ட நிலையில். கடந்த கால மோசடியாளர்களை இனங்கண்டு கொள்வதற்காக பல்வேறு சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

அதில் பிரதானமானவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு தவிர்ப்பு ஆணைக்குழுவாகும். இதன்மூலம் கடந்த காலங்களில் பாரிய ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களை இனங்காண்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

இந்நிலையில் மூன்று நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு தவிர்ப்பு ஆணைக்குழு, நிதி மோசடி விசாரணை பிரிவு, குற்ற விசாரணை பிரிவு என்பன இவற்றில் அடங்கும்.

இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

கடந்த 17ஆம் திகதி தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்திருந்த போதும், அந்த காலப்பகுதியில் ஜனாதிபதி இந்திய விஜயத்தில் ஈடுபட்டிருந்தார்.

எனினும் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திருப்பிய ஜனாதிபதி மைத்திரி, திருமதி தில்ருக்ஷி டயஸின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளா்.

ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டின் பின்னணியில் 5 விடயங்கள் முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவரது இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளும் போது ஜனாதிபதியினால் 5 விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மக்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

1. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர செய்த முறைப்பாடு

2. சமகால அரசாங்கத்தின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான 4 முறைப்பாடுகள்

3. கோத்தபாய ராஜபக்ச நேரடியாக தொடர்புடைய மிக் விமான கொள்வனவு, எவன்கார்ட், டீ.ஏ.ராஜபக்ச அறக்கட்டளை தொடர்பிலான முறைப்பாடு

4. காமினி செனரத்ன தொடர்பிலான முறைப்பாடு

5. ராஜபக்சர்களின் கறுப்பு பணம் மறைக்கப்பட்ட டுபாய் கணக்குகளில் பணத்தை கண்டுபிடிப்பதற்கு இயலாமை, பிணை முறி மோசடிகளை கண்டுக்கொள்ளாமல் விட்டமை மற்றும் துப்பாக்கி சட்டமூலத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதனை புறக்கணித்தமை என்பனவாகும்.

இவை பாரதூரமான குற்றங்களாக இருந்த போதும் ஆணைக்குழுவினால் முறையாக விசாரணை செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட வழக்குகள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளாமை குறித்து நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பாரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் சமகால அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக குறைந்து வருவதால் இவ்வாறான நடவடிக்கை ஜனாதிபதி எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் செயற்பட்ட முறை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட முறை குறித்து பிரச்சினைக்குரிய விடயமாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.