ஜெயலலிதா பற்றி அப்பலோ வைத்தியசாலை இன்று வௌியிட்ட அறிக்கை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஜெயலலிதா பற்றி அப்பலோ வைத்தியசாலை இன்று வௌியிட்ட அறிக்கை

முதல்வர் ஜெயலலிதாவிற்கு தற்போது நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சை நடைபெறுவதாகவும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் 22ம் தேதி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வருக்குக் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு மட்டுமே காரணம் என தொடக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால், லண்டனிலிருந்து சிறப்பு நுரையீரல் மற்றும் செப்ஸிஸ் மருத்துவ நிபுணர் வந்து சென்ற பிறகுதான் தொற்றுக்கான சிகிச்சை தருகிறோம் என்று அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு அப்போலோ வந்து முதல்வருக்கான சிகிச்சைகளை பார்த்துச் சென்றுள்ளனர். இந்தநிலையில், முதல்வருக்கு இதுநாள் வரை அளிக்கப்பட்ட சிகிச்சைகளே தொடரும் எனவும், அதற்கு அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கிறது எனவும் அப்போலோ இரண்டு பக்க செய்தியறிக்கையை வெளியிட்டது.

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் கண்காணிப்பில் தற்போது சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி இன்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், சுவாச சிகிச்சை மருத்துவர்களின் கண்காணிப்பில் நடைபெறுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவிற்கு நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சை நடைபெறுகிறது என்றும் அதோடு ஊட்டச்சத்தும் பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறிய நிர்வாகம் பின்னர் நோய் தொற்று என்று தெரிவித்தது தற்போது நுரையீரல் அடைப்பு என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்னும் என்னென்ன அறிக்கை வெளியாகுமோ என்று அச்சமடைந்துள்ளனர் அதிமுகவினர்.