தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களின் செயற்பாடுகள், செலவினங்கள் தொடர்பான விபரங்களை ஊடகங்களும் பொதுமக்களும் அறிந்து கொள்வதற்கு வழி செய்யும் வகையிலான தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதாக நல்லாட்சி அரசாங்கம் அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அதன் பிரகாரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான வரைபு கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சட்டமூலம் காரணமாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், எனவே குறித்த சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடுமாறு கோரி நேற்று உச்சநீதிமன்றத்தில் மூவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கைத் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த இந்திக கமகே, இசுரு புத்திக ஆகியோரும், ஓய்வுபெற்ற லெப்டினண்ட் கேணல் அனில் அமரசேகர என்பவரும் இணைந்து இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் அனில் அமரசேகர என்பவர் கடந்த காலங்களில் மஹிந்த அணியின் அரசியல் செயற்பாடுகளில் கலந்து கொண்ட ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.