அரசாங்கத்தின் முயற்சியால் மைத்திரிக்கு ஏற்பட்டுள்ள கவலை


அரசாங்கத்தின் முயற்சியால் மைத்திரிக்கு ஏற்பட்டுள்ள கவலை

தகவல் அறியும் உரிமை சட்டத்தை செயலிழக்க செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, (Maithripala Srisena) இது மிகவும் வேதனையான சம்பவம் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டணி அரசாங்கம் ஒன்றை பாதுகாப்பது கூட்டணியை ஏற்படுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் பொறுப்பும் கடமையுமாகும். இவர்களுக்கு அதற்கான பொறுப்பு இருக்கின்றது.

அனைவருக்கும் நியாயம் நிறைவேற்றப்பட வேண்டும். எடுக்கும் தீர்மானங்கள் மக்களுக்கு சார்பானதாகவும் ஜனநாயகமாகவும் இருக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாங்கள் வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றோம்.

தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்க செய்கின்றமையே இதற்கான காரணம். ஆணையாளர் இல்லை. ஆணைக்குழுக்கள் இல்லை.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பான பல முடிவுகளை தற்போதைய அரசாங்கம் பின்நோக்கி திருப்பி வருகிறது.

உதாரணமாக 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்., சுயாதீன ஆணைக்குழுக்கள், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு, தகவல் அறியும் சட்டம், ஊடக சுதந்திரம் என மிக நீண்ட பட்டியலை என்னால் கூற முடியும்.

தகவல் அறியும் உரிமை சட்டம் உட்பட மக்களுக்கு சார்பான முடிவுகளை எடுத்து, சட்டங்களை உருவாக்கியதன் காரணமாகவே தனது அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளும், உதவிகளும் கிடைத்தன.

இதுதான் உண்மையான நிலைமை. நாட்டின் அனைத்து விடயங்களும் மக்களுக்கு சார்பானதாகவும் ஜனநாயகமாகவும் இடம்பெற வேண்டும் என்பதையே மக்களும் எதிர்பார்ப்பார்கள் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.