தன்னை கைது செய்ய வேண்டாம் – பசில்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தன்னை கைது செய்ய வேண்டாம் – பசில்

தன்னைக் கைது செய்வதற்கான ஆபத்து இருப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஏனைய வழக்குகளுக்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜயவர்தனவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அடிப்படை உரிமைமீறல் மனுவில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளதாவது,

திவிநெகும திணைக்களத்தில் நிதி முறைகேடுகள், பணச்சலவை உள்ளிட்ட பல்வேறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தன்னைப் பிரதிவாதிகளாக்கி பல்வேறு வழக்குகள், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கம்பஹா, கடுவெல மற்றும் பூகொட உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள், விசாரணைக்கு உட்படுத்தப்படுவது தன்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்படுகின்றது.

மனுவின் பிரதிவாதிகளாக, பொலிஸ்மா அதிபர், நிதிக்குற்ற பொலிஸ் விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உண்மையை மறைத்து, தவறான தகவல்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளின் கீழ், தன்னை மீண்டும் கைதுசெய்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மேற்குறிப்பிட்ட நீதிமன்றங்களில் முன்னெடுக்கப்படும் வழக்குகளை, விசாரணைகளுக்கு உட்படுத்துவதிலிருந்து நிறுத்துமாறு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதனால் தன்னுடைய அடிப்படை உரிமை மீறப்படுவதாக கட்டளையிடுமாறும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் – தமிழ்மிரர்