தீர்வு விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு அமையவேண்டும்?

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தீர்வு விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு அமையவேண்டும்?

இலங்கையின் சுபீட்சத்திற்கான முன்னேற்றப்பாதையில் இந்தியா பூரண ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்கும். இலங்கையில் வாழும் மூவின மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதையே இந்தியா எப்போதும் விரும்புகின்றது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கின்றார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கினை டிஜிட்டல் கானொளி காட்சியூடாக டில்லியிலிருந்தவாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் காலை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள் என பெருமளவானோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய இந்தியப் பிரதமர், கடந்த வருடம் தனது யாழ்ப்பாணத்திற்கான விஜயம் குறித்து நினைவுபடுத்தியதுடன் யாழ்ப்பாணத்திலுள்ள துரையப்பா விளையாட்டுஅரங்கு வெறும் செங்கல் மற்றும் மணலால் கட்டப்பட்ட கட்டடமொன்றல்ல. அந்த விளையாட்டரங்கமானது பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாகும்.

அது எமது ஒருங்கிணைப்புக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது. இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் நீண்டகாலம் உறவுகள் காணப்படுகின்றன. இரு நாட்டு மக்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

இலங்கையின் முன்னேற்றப்பாதையில் இந்தியா இலங்கையுடன் கைகோர்த்து நிற்கும் என்றும் எடுத்துக்கூறியிருக்கின்றார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை- – இந்திய உறவில் எவ்விதமான பாதிப்புக்களும் இல்லை.

இந்திய, இலங்கை மேம்பாட்டுக்காக கூட்டிணைந்து தேசிய சர்வதேச ரீதியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். சில கடும்போக்காளர்களே இலங்கை – இந்திய உறவை தவறாக பிரசாரம் செய்கின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.

நீண்டகால இந்தியாவுடனான நட்புறவின் காரணத்தினால் பல்வேறு உதவிகள் கிடைத்து வருகின்றன.

நீண்டகாலமாக யுத்தம் நீடித்த நிலையில் அந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சமாதான சூழல் ஏற்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு அபிவிருத்திகளுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ச்சியான உதவிகளை வழங்கி வருகின்றது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கென இந்தியா, பல்வேறுபட்ட உதவிகளை புரிந்துள்ளது.

யுத்தத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதில் 45 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் இந்தியத் தூதுவர் வை.கே. சிங்ஹா கருத்து தெரிவித்திருந்தார்.

இதேபோல் யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்திருந்த யாழ். துரையப்பா விளையாட்டரங்கையும் இந்தியா தனது நிதியுதவியில் புனரமைத்து வழங்கியுள்ளது. இதேபோன்று பல்வேறு நிதியுதவிகளையும் இந்தியா வழங்கி வருகின்றது.

இவ்வாறு யுத்தத்திற்குப் பின்னர் உதவிகளை வழங்கி வருகின்ற இந்தியாவானது யுத்தத்தில் பேரிழப்புக்களை சந்தித்துள்ள தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை பெறுவதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்ற கருத்து தற்போது மேலோங்கி வருகின்றது.

இறுதி யுத்தத்தின் போது அன்றைய இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவானது பூரண ஒத்துழைப்புக்களையும், உதவிகளையும் வழங்கியிருந்தது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்தியா வழங்கிய உதவிகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உட்பட பலரும் பகிரங்கமாவே தெரிவித்திருந்தனர்.

இந்தியாவிற்கு யுத்த விவகாரம் உட்பட சகல விடயங்கள் தொடர்பிலும் அறிவிக்கப்பட்டதாகவும் இந்தியாவின் ஒத்துழைப்புடனேயே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்ததாகவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பல தடவைகள் கருத்து தெரிவித்திருந்தார். இதனை இந்தியாவும் மறுக்கவேயில்லை.

இதிலிருந்து யுத்தத்தின் போது இந்தியா பூரண உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தது என்பது நிரூபணமாகின்றது.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவை புறந்தள்ளிவிட்டு தீர்வொன்றினை காண்பதென்பது நடக்காத காரியமாகும்.

இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா, அன்றுதொட்டு தலையிட்டே வந்துள்ளது.

இந்தியாவின் ஏற்பாட்டில் தான் திம்புப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து 1987ம் ஆண்டு இலங்கை–இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன் மாகாணசபை முறைமையும் அமுல்படுத்தப்பட்டது.

இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தத்தின் மூலமும் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆரம்பத்தில் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியதுடன் நிதி உதவிகளையும் வழங்கியிருந்தது.

இவ்வாறு போராட்டத்தின் ஆரம்பத்திற்கு உதவிய இந்தியா அந்தப் போராட்டத்தின் முடிவுக்கும் காரணமாக அமைந்திருந்தது.

இவ்வாறான நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு உரிய அழுத்தங்களை கொடுக்கவேண்டிய கடப்பாடு இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது.

ஆனால் தற்போதைய நிலையில் அந்த கடமையினை இந்தியா உரிய வகையில் செய்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலரையும் சந்தித்து அவர் பேசியிருந்தார்.

இதன்போது 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் தயார் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

இவ்வாறு வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கடந்த வருடம் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருந்த மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போதும் அதிகாரப்பரவலாக்கல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனையும் இந்திய மத்திய அரசாங்கம் கும்பமேளா நிகழ்விற்கு அழைத்திருந்தது.

இந்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற சந்திப்பின்போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிகின்றது.

இவ்வாறு கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்ற போதிலும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான உரிய நடவடிக்கைகள் இன்னமும் உறுதியான வகையில் எடுக்கப்படவில்லை.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கமானது அரசியல் யாப்பினை மாற்றியமைப்பதற்கு முடிவு செய்துள்ளதுடன், பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாகவும் மாற்றியிருக்கின்றது.

இந்த அரசியல் யாப்பு மாற்றத்தின் போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் ஆராயப்படுமென்றும் புதிய அரசியல் யாப்பில் அது குறித்த விடயதானங்கள் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

ஆனாலும், அரசியல் யாப்பில் இடம்பெறவுள்ள தீர்வானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யத்தக்க வகையில் அமையுமா என்பது கேள்விக்குறியான விடயமாகவே உள்ளது.

ஏனெனில் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி முறையினை அடிப்படையாகக் கொண்ட அரசியல்தீர்வு காணப்படவேண்டுமென்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் ஒற்றையாட்சிக்குள் சமஷ்டியற்ற அதியுச்ச அதிகாரப்பகிர்வினை வழங்குவது குறித்தே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த நிலையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுக்கு செல்லவேண்டியதன் அவசியத்தையும் அழுத்தத்தையும் இந்தியா கொடுக்கவேண்டும்.

ஆனால் இலங்கை அரசாங்கத்துடன் நல்லெண்ணத்தைப் பேணிவரும் இந்திய அரசாங்கமானது இத்தகைய அழுத்தங்களை கொடுப்பதாகத் தெரிய வில்லை.

இவ்வாறான நிலை தொடர்ந்தால் நல்லாட்சி அரசாங்கத்திலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சாத்தியமற்ற ஒன்றாக மாறக்கூடிய நிலையும் காணப்படுகின்றது.

எனவே இலங்கையின் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவிய இந்திய அரசாங்கம் புனரமைப்புக்களுக்கு உதவி வருகின்ற அந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைப்பதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டியது இன்றியமையாதது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்