தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலுள்ள இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை காணி உரிமையாளர்களிடம் விடுவிப்பதானது தேசிய பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே இராணுவத்தின் வசமிருந்த 3,700 ஏக்கர் காணிகள் காணி உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் காணிகள் சிலவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்க முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முக்கிய கேந்திர நிலையங்களைத் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாகவும் கூறினார்.

இருப்பினும், காணிகளின் உரிமையாளர்களுக்கு உயரிய சலுகைகளையும் நஷ்ட ஈடுகளையும் வழங்கத் தாம் தயார் நிலையில் உள்ளதாகவும் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் அண்மையில் நாட்டின் பல பாகங்களிலும் பதிவு செய்யப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இச் சம்பவங்களுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதுடன் இவற்றினால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

 

தகவல்- அத தெரண