தொண்டமானுக்கு அமைச்சர் பதவி? மறுக்கிறார் முத்து சிவலிங்கம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


தொண்டமானுக்கு அமைச்சர் பதவி? மறுக்கிறார் முத்து சிவலிங்கம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படவிருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

எனினும் இதனை நிராகரித்த இ.தொ.கா. தலைவரும் எம்.பி.யுமான முத்து சிவலிங்கம் ஜனாதிபதிக்கான ஆதரவு தொடருமென்றும் தெரிவித்தார்.

இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஐ.தே.முன்னணி ஆட்சியுடன் இணையவிருப்பதாகவும் அவ்வாறு இணைந்த பின்னர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியும் மேலும் ஒருவருக்கு பிரதியமைச்சர் பதவியும் கிடைக்கவிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இதன்போது ஆறுமுகன் தொண்டமானுக்கு கால் நடை அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி வழங்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.

இவ்விடயம் தொடர்பாக இ.தொ.கா தலைவரும் எம்.பி.யுமான முத்து சிவலிங்கத்திடம் கேட்ட போது,ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் இணைவது, அமைச்சர் பதவிகளை இ.தொ.கா பெற்றுக்கொள்ளும் என்ற செய்திகளில் உண்மையில்லை. இதனை நிராகரிக்கின்றேன்.

இ.தொ.கா. இன்று வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே தனது ஆதரவை வழங்கி வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான ஆதரவு தொடரும்.

இது தொடர்பாக அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவுடன் பேச்சுவார்த்தைகளை நடத் தினோம். இதன் போது எமது ஆதரவை புதுப்பித்துக் கொண்டோம் என்றார்.