தொலைபேசிக்கு பதிலளிக்காமல் இருக்கும் நசீர்அஹமட் – கண்டால் அழைத்து வாருங்கள்


தொலைபேசிக்கு பதிலளிக்காமல் இருக்கும் நசீர்அஹமட் – கண்டால் அழைத்து வாருங்கள்

நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் கடந்த சில தினங்களுககு முன்னர் அழைப்பு விடுத்திருந்தார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட விவாதத்தின் போது இரா.சாணக்கியன் வெளியிட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை விடுப்பதாக நசீர் அஹமட் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுடன் சேர்ந்து காணி பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகின்றனர் என இரா.சாணக்கியன் தெரிவித்த கருத்து தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக நசீர் அஹமட் கூறியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில், மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இதுகுறித்து நேற்று(புதன்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நசீர் அஹமட்டினை கண்டால் கூட்டி வாருங்கள், அவரை விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரங்க வெளியில் விவாதத்திற்கு அழைப்பு விடுத்ததன் பின்னர், நசீர் அஹமட் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க மறுப்பது ஏன் எனவும் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்தவொரு ஊடகமாக இருந்தாலும், குறித்த ஊடகம் ஏற்பாடு செய்யும் பகிரங்க விவாதத்தில் பங்கேற்பதற்கு தான் தயாராகவே இருப்பதாகவும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.