நடிகர் மயில்சாமியின் உடல் இன்று காலை தகனம் செய்யப்படும்!


நடிகர் மயில்சாமியின் உடல் இன்று காலை தகனம் செய்யப்படும்!

நடிகர் மயில்சாமியின் உடல் இன்று

நடிகர் மயில்சாமியின் உடல் இன்று காலை தகனம் செய்யப்படும்!

காலமான நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் இன்று காலை 10 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று தனது 57 வது வயதில் காலமானார்.

ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் மயில் சாமி நடித்துள்ளார்.

நேற்று அதிகாலை ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர் தனது சுயநினைவை இழந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், நடிகர் மயில்சாமி மறைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் ஆலயத்தில் சிவமணியுடன் இணைந்து இருந்த காணொளிகளே இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார்.

1984இல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அன்று முதல் சிறிய பெரிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

2000ஆம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார்.

நடிகர் விவேக் உடன் இணைந்து அவர் நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

நடிகர் மயில்சாமியின் உடலம் சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலகினர், அரசியல் பிரபலங்கள்,ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.