நல்லாட்சியை கவிழ்க்க கனவு காண்போரின் கனவு ஒரு போதும் நனவாகாது – ஜனாதிபதி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நல்லாட்சியை கவிழ்க்க கனவு காண்போரின் கனவு ஒரு போதும் நனவாகாது – ஜனாதிபதி

நாட்டைப் பிரிப்பதற்கும் தேசிய அரசாங்கத்தினூடாக உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சியை சீர்குலைக்கவும் பலரும் முன்னின்று முயற்சிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் ஒன்றைக் கூறி வைக்க விரும்புகிறேன். நாட்டு மக்களுக்குத் தேவையானதையே நாம் வழங்க வேண்டும்.

மக்களுடைய தேவையை சமாதானத்தை வழங்குவதற்கு அரசியல், இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரும் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் நிர்மானிக்கப்பட்ட கிழக்கு ஆடைத் தொழிற்சாலையை நேற்று (01) மாலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு, ஏறாவூர் உள்ளிட்ட பிரதேசங்கள் எனக்கு புதிதல்ல. உங்களுடைய அடுத்த மாவட்டத்தில் தான் இருக்கிறேன். நான் பிறந்து வாழ்ந்தது அடுத்த மாவட்டத்திலே தான். எனக்கு சுமார் 25வருடங்களுக்கு மேலாக இந்த இடங்கள் பழக்கமாக உள்ளது.

கடந்த ஜனவரி 8ம் திகதி எனக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கினீர்கள். எனவே இந்த நாட்டில் மாற்றம் ஒன்றினை உருவாக்க வழங்கிய ஆதரவுக்கு நன்றி.

எனக்காக வாக்களித்த மக்கள் எனக்கு ஒரு வேண்கோள் விடுத்தார்கள். எனக்கு உணவு உடை இருந்தாலும் கூட சுதந்திரமாக வாழக்கூடிய சூழலையே உருவாக்கச் சொன்னார்கள்.

அன்று சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் பயத்துடன் வாழ்ந்தார்கள். சுதந்திரமாக வாழவில்லை. சுதந்திரமாக தொலைபேசியில் கூட பேசவில்லை. தொலைபேசியில் பேசும் போது கூட இரகசியமாகவே பேசினார்கள்.

கிழக்கு மாகாணம், மேல் மாகாணம் என்ற வேறுபாடுகள் இந்த நல்லாட்சியில் இல்லை. எல்லா மாகாணங்களுக்கும் சமமான அபிவிருத்திகளை வழங்கி வருகின்றோம்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் வட கிழக்கை பிரிக்க முனைகிறது. நாட்டை சர்வதேசத்திற்கு காட்டிக்கொடுக்க முனைகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.

உண்மையில் நானும் இந்த நாட்டுப் பிரஜைதான். எனக்கும் இந்த நாட்டின் மீது பற்றும் பாசமும் உள்ளது. இந்த நாட்டில் மீண்டும் ஆயுதமேந்துதல், யுத்தப் போராட்டம் என்பவற்றிற்கு ஒரு போதும் நாம் இடமளிக்க மாட்டோம்.

தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த நாட்டில் நாங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

எங்களுக்கு துப்பாக்கியினால் நீண்ட சமாதானத்தை உருவாக்க முடியாது. நாட்டு மக்கள் மனதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. யுத்தம் ஏன் ஏற்பட்டது என பார்த்தோமா?.

பாதுகாப்பு படையைச் சேர்நத சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் உயிரை இழந்தார்கள். எந்த மதம் என்று இல்லாமல் இறந்து மடிந்தார்கள். எனவே இந்த மக்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு கண்டார்கள். எனவே மீண்டும் யுத்தம் எற்படாத வகையில் பிரச்சினையை தீர்த்து வைக்கவே வேண்டும். எனவே அனைவருக்கும் அது சம்பந்தமாக பாரிய பொறுப்பு உள்ளது.

கிழக்கு மகாணத்திற்கு மேல் மகாண அபிவிருத்தி சமமாக உள்ளதா? மேற்கு கிழக்கு மாகாண மக்களின் பொருளாதார நிலைமை சமமாக உள்ளதா? கல்வி வசதிகள் சமமாக உள்ளதா? மக்களுக்கு சுகாதார சேவை ஒரே மாதியாக வழங்கப்படுகின்றனவா? மக்களின் பொதுப் போக்குவரத்து வசதி சமமாக உள்ளதா அப்படியானால் இந்த பிரச்சினையை நாம் புரிந்து கௌ்ள வேண்டும்.

எனவே வடக்கு கிழக்கு மேற்கு கிழக்கு என்ற வேறுபாடு இல்லை. எல்லாம் ஒரே மாதிரயாக அபிவிருத்திடைய வேண்டும். எல்லாம் சமமாக வழங்க வேண்டும். எந்தவித வேறுபாடும் இன்றி சந்தோசமாக வாழ்வதற்கு எங்களது அரசை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தால் ஐவரும் ஒரே மாதிரி வாழ வேண்டும்.

சிங்கள பௌத்த மக்கள் வாழ வேண்டுமானால் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். அனைவரும் தங்களுடைய பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

அதை நாங்கள் இவ்வாறு செயற்படுத்தும் போது சிலர் நாட்டைப் பிரிக்க போகின்றோம் என்றும், நாட்டை காட்டிக் கொடுக்கின்றோம் என்றும், சர்வதேசத்திற்கு அடிபணியப் பேகின்றோம் என்றும் சொல்கின்றனர். நாட்டைப் பற்றிய வேதனை எங்களுக்கும் இருக்கின்றது.

இங்கு வேலை செய்யும் பெண்களை பார்த்தால் சந்தோசமாகவுள்ளது. அவர்கள் இனமத பேதமின்றி செயற்படுகின்றார்கள். கிழக்கு மாகாண சபை நல்லிணக்கத்தின் சான்றாகத் திகழ்கிறது. அந்த அமைப்பை சக்திமயப்படுத்த வேண்டும். எல்லா கம்பனிகளையும் சேர்நதவர்கள் ஒன்றாக வேலை செய்கின்றார்கள்.

அரசு என்ற வகையில் ஆதரவு வழங்குவோம். ஒன்பது மாகாணமும் சமமாக அபிவிருத்தி செய்யப்படும். பொருளாதாரத்தை மேம்படுத்த உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். இந்த நாட்டில் எல்லாத் துறையினரும் சேவையாற்ற வேண்டும்.

நேர்மையாக அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வேண்டும். பொதுவான இலக்கு இருக்கின்றது. நாளைய தினத்தை நல்ல நாளாக மாற்றுவோம். நாளை பிறக்கும் பிள்ளைகளுக்காக இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டியது நமது கடமை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(அத தெரண)