நாட்டின் நல்லிணக்கத்துக்கு உதவுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் கூட்டமைப்பு கோரிக்கை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நாட்டின் நல்லிணக்கத்துக்கு உதவுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் கூட்டமைப்பு கோரிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமையன்று இடம்பெற்ற மோதல் சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பு இன்று மாலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல மாணவர்கள் காயமடைந்தமை மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கையின் அடிப்படையில் சிங்கள மாணவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை என்பது கவலை தரும் செய்திகளாகும்.

இந்தநிலையில் நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகளின் கீழ் இந்தமாதிரியான சம்பவங்கள் மீண்டும் இடம்பெற்றுவிட மாணவர்கள் அனுமதிக்கக்கூடாது என்று கூட்டமைப்பு கோரியுள்ளது.

பாதுகாப்பு கருதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மீண்டும் திரும்பி வந்து தமது கல்வியை தொடர வேண்டும்.

அத்துடன் மாணவர்களும் பல்கலைக்கழக அதிகாரிகளும் இணைந்து பல்வேறு இடங்களில் இருந்து வந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வந்து ஒன்றாக பயிலும் மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என கூட்டமைப்பு அந்த அறிக்கையில் கோரியுள்ளது.