நாட்டை பிரிக்கும் ஈழக் கொள்கைக்கு இடமில்லை – ஜனாதிபதி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


நாட்டை பிரிக்கும் ஈழக் கொள்கைக்கு இடமில்லை – ஜனாதிபதி

நாட்டில் “ஈழக்” கொள்கைக்கு இடமில்லை. அது முழுமையாக தோல்வியடையச் செய்யப்படும். ஸ்திரமான நாடு கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை பலாத்காரமாக பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் கட்சியைப் பலப்படுத்தும் எனது முயற்சிகளுக்கு இன்று தடைகள் போடப்ப்படுகின்றன. இதனை கண்டு நான் அஞ்சமாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அம்பலாங்கொடை தர்ம அசோக மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

எந்தவிதமான தடைகள் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் அனைத்து பிரச்சினைகளையும் தாங்கிக் கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலமிக்க கட்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான எனது பயணம் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச் செல்லப்படும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை நான் பலாத்காரமாக பறித்தெடுக்கவில்லை. அனைவரது விருப்பத்துடனேயே தலைமைப் பதவியை பெற்றுக் கொண்டேன். எனவே கட்சியில் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு கட்சியை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வேன்.

இதனைத் தடுப்பதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. ஆனால் சுதந்திரக் கட்சி மீது அன்பு கொண்ட நான் எந்தத் தடைகளையும் கண்டு அஞ்சமாட்டேன். அனைத்திற்கும் முகம் கொடுக்க தயாராகவே உள்ளேன்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களின் இன்றைய முக்கிய கடமை கட்சியை பலப்படுத்தி முன்னேற்றகரமாக முன்னெடுத்துச் செல்வதே ஆகும். அதை விடுத்து கட்சியை பிளவுபடுத்தி அவசரமாக அரசாங்கமொன்றை அமைப்பது அல்ல.

இன்று நாட்டு மக்களுக்குத் தேவைப்படுவது புதிய அரசாங்கமல்ல. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையே எதிர்பார்க்கின்றனர். அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இரண்டாம் இடத்தை வழங்கி நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். அத்தோடு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது அனைவரதும் கடப்பாடாகும்.

நல்லதொரு அரசாங்கம் ஏற்படுத்துவதற்கு முதலாவதாக நல்லதொரு கட்சி இருக்க வேண்டும். அதற்காக நல்லதொரு ஒழுக்கமாக கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டியெழுப்பப்பட வேண்டும்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கும் அன்றைய உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களின் செயற்பாடுகளே காரணமாக அமைந்தன.

நாட்டை பிரிக்கும் ஈழக் கொள்கைக்கு இடமில்லை. முழுமையாக தோல்வியடையச் செய்யப்படும். அனைவரும் சகோதரத்துவத்தடன் வாழக்கூடிய நிலையான ஸ்திரமான நாடு கட்டியெழுப்பப்படும். எமது மரபுரிமைகளை பாதுகாத்துக் கொண்டு எமது பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்துக் கொண்டு நாட்டின் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

எனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றியை பறைசாற்றும் சுதந்திர மே தினத்திற்கு அனைவரும் காலி நகரில் அணிதிரள வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது பகிரங்க அழைப்பையும் விடுத்தார்.

இந்நிகழ்வில் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால், அமைச்சர் சந்திர வீரக்கொடி, பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் பியசேன கமகே, குணரத்ன வீரக்கோன், சஜிந்த வாஸ் குணவர்தன உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.