முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ நேற்று இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10.25 மணியளவில் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானமான EK-655 இல் நிருபமா ராஜபக்ஷ டுபாய் நோக்கிப் புறப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயர்களும் பண்டோரா பேப்பர்களில் இடம்பெற்றுள்ளன. இது அண்மைய நாட்களில் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிடப்பட்ட 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உறுதிப்படுத்தப்படாத சொத்துக்கள் குறித்து, இலங்கையின் சட்டப்பிரிவினால் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், இதுவரை எந்த முடிவும் வெளியாகவில்லை.
அரசாங்கத்தின் பெருமளவான அமைச்சர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி கொழும்பில் உள்ள சொகுசு விடுதிகளில் குடும்பத்துடன் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக அரசாங்க அமைச்சர்களின் வீடுகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சில வீடுகளைத் தாக்கி வருவதாகவும் தெரியவருகிறது.
அதன்படி, கொழும்பில் உள்ள சொகுசு விடுதிகளில் ஏராளமான அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் ஏற்கனவே தங்கியுள்ளதாக அறியமுடிகிறது.