நீரில் மூழ்கி நான்கு பேர் பலி – தாயையும் மகளையும் காணவில்லை


நீரில் மூழ்கி நான்கு பேர் பலி – தாயையும் மகளையும் காணவில்லை

நாட்டின் இருவேறு பிரதேசங்களில் நீரில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளனர்.

பேராதனை, களுகமுவ பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராட சென்ற ஐவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20 வயதுடைய பெண்ணும் 2 வயது குழந்தையும் காணாமல் போயுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து ஆண் ஒருவரையும் சிறுவன் ஒருவரையும் மீட்டு கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கண்டி, மாபானாவதுர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காணாமல் போனவர்களைக் தேடும் பணியை பொலிஸ் உயிர்காக்கும் படையினர், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல்போயிருந்த இளைஞர்களில், மூன்றாவது நபரின் சடலமும் இன்று (6) மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கடலில் நீராடியபோது, நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவரின் சடலம் நேற்றும் மற்றொருவரின் சடலம் இன்று காலையிலும் மீட்கப்பட்டன.

இந்நிலையில் மூன்றாவது நபரின் சடலத்தைத் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில் அவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு சென்று நீராடிக்கொண்டிருந்த மூவர் நேற்று (5) மாலை திடீரென கடலில் மூழ்கினர். இதனையடுத்து காணாமல்போன இளைஞர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மதவுவைத்த குளத்தை சேர்ந்த மனோகரன் தனுஷன் (27), சிவலிங்கம் சகிலன் (26), தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் (26) ஆகியோரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.