பகல் வேளைகளில் சமையல் செய்ய தடை; மீறினால் 2 வருட சிறை; அரசின் விநோத உத்தரவு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பகல் வேளைகளில் சமையல் செய்ய தடை; மீறினால் 2 வருட சிறை; அரசின் விநோத உத்தரவு

கடும் வெப்பம் நிலவுவதால், தீ விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், பகல் நேரங்களில் யாரும் சமையல் செய்ய வேண்டாம் எனவும், அதனை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இந்தியாவின் பீகார் அரசு வினோத உத்தரவை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை விட வட மாநிலங்களில் கடுமையான வெயில் அடித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வெயிலின் கொடுமைக்கு 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மனிதர்கள் மட்டுமின்றி, வெயிலின் கொடுமையால் 1200க்கும் மேற்பட்ட விலங்குகளும் பலியாகியுள்ளன.

இந்நிலையில், வெயிலால் ஏற்படும் இந்தப் பிரச்சினைக்கு வித்தியாசமான தீர்வு ஒன்றைக் கண்டறிந்துள்ளது பீகார் அரசு.

பகல் நேரங்களில் மக்கள் அடுப்புகளைப் பற்ற வைக்கக்கூடாது என்பது தான் அது.

அதாவது, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வீட்டில் யாரும் சமைக்கக் கூடாது என பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. சமையல் மட்டுமின்றி யாகம் வளர்ப்பது, தீ வளர்த்து மத சடங்குகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளிலும் மக்கள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடும் வெப்பக்காற்று வீசி வருவதால், சமையல் செய்யும்போது தீ பரவி வீடுகளில் தீவிபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த உத்தரவு விதிக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன், பெகுசாரி மாவட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 300 குடிசைகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்திற்கான காரணத்தை விசாரித்த பிறகு தான், அரசு மேற்கூறிய பகலில் சமைக்கத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.