பனாமாவில் பண மோசடியுடன் தொடர்பு கொண்ட இலங்கையர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அவற்றுக்குரிய திணைக்களங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வொசிங்டனில் வைத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் அமெரிக்கா சென்ற நிதியமைச்சர் அங்கு சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போது, பனாமா மோசடிகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் குறித்த விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று  குறிப்பிட்டுள்ளார்.

வரி சலுகையை பெற்றுக் கொள்வதில் தடங்கல் இல்லை.ஆனால் உண்மையான சொத்து விபரங்களை வெளியிடாமல் பதுக்கியமையே சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

அத்துடன் பனாமா ஆவண மோசடியுடன் தொடர்பு கொண்ட நிறுவனங்கள் குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.என்றாலும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள உரிய திணைக்களங்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.