பாகிஸ்தானின் எதிர்காலம் அதன் சொந்த செயற்பாட்டில் உள்ளது – ஜெய்சங்கர்


பாகிஸ்தானின் எதிர்காலம் அதன் சொந்த செயற்பாட்டில் உள்ளது – ஜெய்சங்கர்

பாகிஸ்தானின் எதிர்காலம் பெரும்பாலும் அந்த நாட்டின் சொந்த செயற்பாடுகள் மற்றும் விருப்பங்களாலேயே தீர்மானிக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு ஒரு வழியை அந்த நாடே கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் போது அந்த நாட்டுக்கு இந்தியா உதவியதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், இது மிகவும் வித்தியாசமான உறவு என்று கூறியுள்ளார்.

எனினும் பாகிஸ்தானுடன் உள்ள உறவு அதற்கு பொருந்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் எதிர்காலம் பெரும்பாலும் பாகிஸ்தானின் செயல்களாலும், பாகிஸ்தானின் தேர்வுகளாலும் தீர்மானிக்கப்படும் என்றே தாம் நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவரும் ஒரு கடினமான சூழ்நிலையை திடீரென மற்றும் காரணமின்றி அடைவதில்லை என்றும் இந்திய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அந்நிய செலாவணி கையிருப்பு குறைதல், அதிக பணவீக்கம் மற்றும் அதன் நாணயத்தின் கூர்மையான தேய்மானம் உள்ளிட்ட பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கிறது.

இந்தநிலையில் தமது நேர்காணலில், இலங்கைக்கான நல்லெண்ணத்தையும், பாகிஸ்தான் தொடர்பாக இந்திய மக்கள் மத்தியில் உள்ள உணர்வுகளையும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

இஸ்லாமாபாத் இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது, இது இருதரப்பு உறவுகளை கடுமையாக பாதித்துள்ளது.

ஏனினும் இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு சிரமம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவ தயாராக உள்ளது என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இலங்கையுடனான உறவு தொடர்பில், இந்திய மக்கள் மத்தியில் நல்லெண்ணம் நிறைய உள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையின் கடினமான பொருளாதார நிலைமையை சமாளிக்க இந்தியா 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியிருந்தது.

அத்துடன் கடந்த மாதம், இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவு கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் கையளித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.