பாகிஸ்தான் வௌியேறியது; மேற்கிந்திய தீவுகள் தப்பியது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பாகிஸ்தான் வௌியேறியது; மேற்கிந்திய தீவுகள் தப்பியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளது.

நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தென் ஆப்பிரிக அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டி தென் ஆப்ரிக்காவுக்கு மிகவும் முக்கியமான ஒரு போட்டியாகும்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் பந்திலேயே நட்சத்திர ஆட்டக்காரரான ஹஷீம் அம்லாவை இழந்தது.

அதன் பின்னர் சீராக விக்கெட்டுகள் சரிய, அந்த அணி தமது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு மொத்தமாக 122 ஓட்டங்களை எடுத்தனர்.

தென் ஆப்ரிக்க அணியில் குவிண்டன் டி காக் மட்டுமே ஓரளவுக்கு நிதானமாக ஆடி அதிகபட்சமாக 47 ஓட்டங்களை எடுத்தார்.

அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியும் துவக்கம் முதலே ஆட்டம்காண ஆரம்பித்தது. அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 4 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

ஆனாலும் அவருடன் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜான்ஸன் சார்ஸ்லும், பின்னர் ஆடவந்த மார்லன் சாமுவேல்ஸும் ஓரளவுக்கு அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினர்.

இரண்டு போட்டிகளில் ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், கடும் அழுத்தங்களுக்கு உள்ளான தென் ஆபிரிக்க அணி அதை சமாளிக்க முடியாமல் இரண்டு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் பிரிவில் இரண்டாவதாக யார் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்பது சனிக்கிழமை இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகே தெரியவரும்.

இதேவேளை மொஹாலில் நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

மொஹாலில் நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி தமது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை எடுத்தனர்.

அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் அற்புதமாக ஆடி 61 ஓட்டங்களை எடுத்தார். அதில் ஏழு பவுண்ட்ரிகளும் அடங்கும்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காராக களம் இறங்கிய ஷார்ஜீல் கானும், மூன்றாவதாக ஆடவந்த காலித் லத்தீஃபும் உறுதியுடன் ஆடி ஓட்டங்களை தொடர்ச்சியாக குவித்து வந்தனர்.

எனினும் ஷார்ஜீல் கான் ஆட்டமிழந்த பிறகு காலித் லத்தீஃப், உமர் அக்மல் ஆகியோர் நிதானமாக ஆடினாலும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை வலுவாக எதிர்கொள்ள முடியவில்லை.

பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகளும் சீராக விழத் தொடங்கின. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் ஜேம்ஸ் ஃபால்க்னெர் மிகச்சிறப்பாக பந்துவீசி 28 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.